தமிழகக் கோயில்களும் ஓவியங்களும்
தமிழகக் கோயில்களில் ஓவியங்கள் வரையப்பட்டிருப்பது குறித்த சில தகவல்களை டாக்டர் அம்பை மணிவண்ணன் எழுதிய கோயில் ஆய்வும் நெறிமுறைகளும் எனும் நூலில் 198 முதல் 201 வரை உள்ள பக்கங்களில் தெரிவித்துள்ளார். அவை
1. தமிழகத்தில் விசய நகர- நாயக்கரது ஓவியங்களை காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவரங்கம், திருவீழிமிழலை, சிதம்பரம், தஞ்சாவூர், கும்பகோணம், மதுரை, திருவெள்ளறை, அழகர்கோயில், நத்தம் கோவில்பட்டி, கூடலழகர் கோயில், திருவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், புதுக்கோட்டை கோகர்னேஸ்வரர் கோயில், திருக்கோட்டியூர் சௌமிய நாராயணப் பெருமாள் கோயில், திருநெல்வேலி மாவட்டம் இடைகால், திருப்புடை மருதூர், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் ஆகிய இடங்களில் காணலாம்.
2. இவற்றில் காஞ்சிபுரம் மற்றும் திருப்பருத்திக் குன்றத்தில் மகாவீரர் கோயிலின் சங்கீத மண்டபத்தில் கி.பி. 14 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் இடம் பெற்றுள்ளது. இதில் சில காட்சிகளே மிஞ்சியுள்ளன. காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் கருவறையின் முன்னுள்ள மண்டபத்திலும், ஆண்டாள் ஊஞ்சல் மண்டபத்திலும், நரசிம்மர் கருவறைக்கு முன்பாகவுள்ள மண்டபத்திலும் கி.பி. 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ரதி - மன்மதன், வஸ்திர அபகர்ணன், காளியன் என்னும் அசுரன் ஆகியோரது ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
3. திருவண்ணாமலையில் உள்ள கிருஷ்ண மண்டபத்தில் திருப்பாற்கடலைக் கடையும் காட்சி, சிவன் உமையம்மையைத் திருமணம் புரியும் காட்சிகள், கோபியருடன் கண்ணன், முருகன் - வள்ளி திருமணக் காட்சி ஆகியன காணப்படுகின்றன.
4. திருவரங்கம் கோயில் வேணுகோபாலன் சந்நிதியின் முன்பாக உள்ள மண்டபத்தில் பாகவத புராணக் காட்சிகளும், ஸ்ரீரங்கமகாத்மியம் தொடர்பான காட்சிகளும் அமைந்துள்ளன.
5. தஞ்சை - திருவீழிமிழலைச் சிவன் கோயிலில் கண்ணனது லீலைகளே காணப்படுகின்றன. திருவெள்ளறை புண்டரிகாட்சர் கோயில் சித்திர மண்டபவிதானத்தில் திருமாலின் தசாவதாரம் மற்றும் இராமாயண ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
6. மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் திருவிளையாடற் புராணக் காட்சிகளைத் தீட்டியிருந்தனர். இவை சமீபத்தில் நடந்த திருப்பணியின் போது அழிக்கப்பட்டு விட்டன. இதில் எஞ்சியிருப்பது மீனாட்சி சுந்தரேசுவரர் திருமண நிகழ்ச்சியை இராணிமங்கம்மாள் கண்டுகளிப்பது போன்ற ஓவியத் தொகுதி மட்டுமே.
7. மதுரை கூடழலகர் கோயிலானது அஷ்டாங்க விமானக் கோயிலாதலால் மேலிரண்டு அடுக்குக் கருவறைகளிலும் திருமாலின் அவதாரங்கள், மும்மூர்த்திகள், திக்கு பாலகர்கள் போன்ற ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
8. "மதுரை அழகர்கோயில் வசந்த மண்டபத்தில் இராமாயணம் முழுமையும் ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இந்த ஓவியம் பல்வேறு சிறப்புக்களைக் கொண்டது. கி.பி.1700-ல் வரையப்பட்ட இந்த ஓவியத் தொகுதியில் தெலுங்கு இராமாயணம் இடம் பெறுகிறது. இடில் தெலுங்கிலும், தமிழிலும் விளக்கம் எழுதப்பட்டுள்ளன. வட்டாரப் பழக்க வழக்கங்களின் தாக்கம் இடம் பெற்றுள்லது. இயக்க உத்திமுறை காணப்படுகிறது. ஆறுகளைக் காட்டும் போது வெள்ளை நிறம் பயன்படுத்தப்பட்டுள்ளதோடு அதில் மீன், ஆமை முதலியனவும் வரையப்பட்டுள்ளன". இதே போன்று இராமாயண ஓவியங்கள் புதுக்கோட்டை திருக்கோகர்ணேசுவரர் கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆகிய இடங்களில் இடம் பெற்றுள்ளன.
9. மதுரைக்கருகிலுள்ள நத்தம் கோவில்பட்டியில் உள்ள சிவன் கோயிலில் சுந்தரபுராணம் தொடர்பாகவும், லிங்கமநாயக்கன் என்னும் மன்னன் செய்த சேத்திராடனம் என்னும் புண்ணியத் தலங்களுக்குச் சென்று வந்த நிகழ்ச்சியையும் ஓவியங்களாகத் தீட்டியுள்ளனர்.
10. தஞ்சை பிருகதீசுவரர் கோயிலில் சோழர்கால ஓவியங்களுக்கு மேலே தீட்டப்பட்டிருந்த நாயக்கர் கால ஓவியங்களும் கருவறையின் மேற்பகுதி வெளிச்சுவரின் மேற்கு நோக்கிய சுவரில் இடம் பெற்றுள்ளன. அவை திசைக் காவலர்களது ஓவியம், அரம்பை, ஊர்வசி, அசுரர்களும் தேவர்களும் திருப்பாற்கடலைக் கடையும் காட்சி, திருமால், போர்க்களக் காட்சி, துர்க்கை, சும்பன், நிசும்பனை அழித்தல் முதலான போர்க்காட்சிகளாகும்."
11. சிதம்பரம் நடராசர் கோயிலில் இடம் பெற்றுள்ள விசயநகர நாயக்கரது சிற்பங்கள் லெபாக்ஷி பாணியை அப்படியே பிரதிபலிப்பதாக அமைந்துள்ளன. அவற்றில் ரிசிபத்தினிகள் சிவபெருமானின் அழகில் மயங்கித் தமது ஆடைநெகிழ பின் தொடரும் காட்சி மிக அருமையாகத் தீட்டப்பட்டுள்ளது.
12. கும்பகோணம் இராமசுவாமி கோயிலின் கருவறைப் பிரகாரச் சுவரில் இராமாயணம் முழுமையும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. ஆனால் இவை மறு திருத்தம் செய்யப்பட்டது போலத் தோன்றுகின்றன.
13. நார்த்தாமலை விசயாலய சோழீசுவரர் கோயிலில் இடம் பெற்றுள்ள ஓவியங்கள் சோழர் காலத்தவை என்றும், நாயக்கர் காலத்தவை என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இங்குள்ள ஓவியங்கள் புகைபடிந்து காணப்படுகின்றன.
14. திருக்கோட்டியூர் சௌமிநாராயணப் பெருமாள் கோயிலில் அஷ்டாங்க விமானம் இடம் பெற்றுள்ளதால் மேலிரு கருவறைகளில் திசைக் காவலர்களது ஓவியங்களும் திருமாலின் பல்வேறு அவதாரங்களும் என ஓவியங்கள் அமைந்துள்ளன.
15. திருநெல்வேலி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாரது வரலாறு ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. ஸ்ரீ வைகுண்டம் கோயில் கருவறைப் பிரகாரத்தில் 108 திவ்ய தேசங்களில் உறைகின்ற திருமாலின் வடிவங்கள் வரையப்பட்டுள்ளன. எனினும் இவற்றில் பெரும்பாலனவை அழிந்து விட்டன. இக்கோயிலின் கொடிக்கம்ப மண்டபத்தில் உள்ள சிறு மண்டபத்தின் விதானத்தில் நவதிருப்பதிகளில் உறைகின்ற திருமாலின் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
16. இடைகால் மற்றும் திருப்புடைமருதூர் கோயில்களில் இடம் பெற்றுள்ள நாயக்கர் கால ஓவியங்கள் இன்றும் அழியாது மிகத் தெளிவாக அக்கால ஓவியங்களை அப்படியே பிரதிபலிப்பதாக உள்ளன
17. இராமநாதபுரம் இராமலிங்க விலாசத்தில் இராமாயணம் முழுமையும் ஓவியங்களாகத் தீட்டப்பட்டுள்ளது. தவிர பாகவத புராணமும் இங்கு முழுமையாகத் தீட்டப்பட்டுள்ளது.
