சேக்கிழார்
வாழ்க்கை வரலாறு
சேக்கிழார் என்பவர் 12ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிவ அடியார் ஆவார். இவர் இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை மந்திரியாக இருந்தவர். சோழன் சீவகசிந்தாமணி எனும் காமரசம் அதிகமுள்ள சமண நூலை படிப்பதனால், சோழனையும், மக்களையும் நல்வழிப்படுத்த சிவபெருமானின் அடியார்களான அறுபத்து மூன்று நாயன்மார்களின் வரலாற்றை விளக்கும் திருத்தொண்டர் புராணத்தினை இயற்றியவர் ஆவார். பெரியபுராணத்தைப் பாட தில்லையில் சிவபெருமானே உலகெல்லாம் என்று அடியெடுத்து கொடுத்தாக நம்பிக்கையுண்டு. சிவத்தொண்டின் காரணமாகவும், மதிநுட்பத்தின் காரணமாகவும் இவர் உத்தம சோழப் பல்லவன், தொண்டைமான், தெய்வப்புலவர், தெய்வச்சேக்கிழார் போன்ற பட்டங்களைப் பெற்றவர். உமாபதி சிவாச்சாரியார் என்பவரால் சேக்கிழார் புராணம் எனும் நூலும், மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களால் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் எனும் நூலும் சேக்கிழாரை முன்வைத்து இயற்றப்பட்டுள்ளன. சேக்கிழார் என்பது வெள்ளாளர் மரபில் வழங்கி வந்த குடிப்பெயராக கூறப்படுகிறது.
பிறப்பு:
கி.பி. 12 ஆம் நூற்றாண்டில் தொண்டை நாட்டைச் சேர்ந்த புலியூர்க் கோட்டத்தில் உள்ள குன்றத்தூர் என்னும் ஊரில் வெள்ளாளர் மரபில் வெள்ளியங்கிரி முதலியார் மற்றும் அழகாம்பிகை ஆகியோருக்கு முதல் மகனாக சேக்கிழார் பிறந்தார். இவருக்கு பெற்றோர் அருண்மொழித்தேவர் என்று பெயரிட்டனர். இவருக்கு பாலறாவாயர் என்ற தம்பியும் இருந்தார்.
இளமைப் பருவம்:
சோழநாட்டு அரசனான இரண்டாம் குலோத்துங்க சோழன் அநபாய சோழருக்கு கடலினும் பெரியது எது உலகினும் பெரியது எது மலையினும் பெரியது என்ற கேள்விகள் தோன்றின. அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழாரின் தந்தை இந்தக் கேள்விகளுக்கு விடைதெரியாது தவித்த பொழுது, சேக்கிழார் விடையை அளித்தார். அதனை மன்னரிடம் கூறியமையால் சேக்கிழாருக்கு அமைச்சர் பதவியை அநபாய சோழர் அளித்தார். சேக்கிழார்க்கு உத்தம சோழப் பல்லவன் என்ற சிறப்பு பட்டத்தினை தந்தார் அரசன். சேக்கிழார் திருநாகேசுவரம் கோயில் இறைவன் மீது பற்று வைத்திருந்தார். அதனால் குன்றத்தூரில் திருநாகேசுவரம் என்ற பெயரிலேயே கோயிலொன்றினைக் கட்டினார்.
திருத்தொண்டர் புராணம் இயற்றுதல்:
புராணம் இயற்ற தில்லை எனப்படும் சிதம்பரம் நடராசர் கோயிலுக்குச் சென்றார். அங்கு சிவகங்கைத் தீர்த்தத்தில் நீராடித் தில்லை நடராசப் பெருமானை வணங்கினார். பின்பு ஆயிரம் கால் மண்டபத்தில் அடியார்கள் முன்னிலையில் இறைவன் ‘உலகெலாம்’ என அடியெடுத்துக் கொடுக்க புராணம் பாடத் தொடங்கினார். சித்திரை மாதம் திருவாதிரை நட்சத்திர நாளன்று புராணம் தொடங்கி, அடுத்த வருடம் சித்தரை மாதம் அதே திருவாதிரை நட்சத்திரத்தில் புராணத்தினை முடித்தார். ஓராண்டு காலம் புராணம் இயற்றப்பட்டது. இந்நூலில் திருத்தொண்டத் தொகையில் சுந்தர மூர்த்தியார் பாடியவாறே அடியார்களின் வரலாற்றை அதன் வரிசையிலேயே பாடினார். அத்துடன் சுந்தரமூர்த்தியாரையும், அவரது பெற்றோர் சடையனார், இசைஞானியாரையும் நாயன்மார்களாக இணைத்துக் கொண்டார். பெரிய புராணத்தில் இரண்டு காண்டங்களும், பதிமூன்று சருக்கங்களும், நான்காயிரத்து இருநூற்று எண்பத்து ஆறு (4286) பாடல்களும் உள்ளன. அதுநாள் வரை சைவசமய இலக்கியங்களில் பதினொரு திருமுறைகள் இருந்தன. அதனுடன் பன்னிரண்டாம் திருமுறையாக பெரியபுராணம் சேர்த்துக்கொள்ளப்பட்டது.
மன்னன் சிறப்பு செய்தமை:
சேக்கிழார் பெரியபுராணத்தினை திருவாதிரை நட்சத்திரத்தன்று பாடி முடிந்ததும், அரசன் வந்து அவரை தன்னுடைய பட்டத்து யானையின் மீது ஏற்றினார். பின்பு தானும் அந்த யானையின் மீது ஏறி, சேக்கிழாருக்கு வெண் சாமரம் வீசி புராணத்தோடு ஊர்வலம் சென்றார். அடியார்கள் பின் தொடர்ந்து வந்தனர். தில்லையில் வாழ்ந்த அடியார்கள் பெரிய புராணத்தினை சிவபெருமானக் கண்டனர் என்பது நம்பிக்கையாகும்.
