செங்கிஸ் கான்

செங்கிஸ் கான்

bookmark

செங்கிஸ் கான் (1162 அல்லது 1155 – ஆகஸ்டு 18, 1227) மங்கோலியப் பேரரசைத் ஸ்தாபித்த மங்கோலிய அரசராவார். 1206 இல் மங்கோலிய துர்கிய இனக் குழுக்களை இணைத்து மங்கோலியப் பேரரசை இவர் அமைத்தார். இவர் சிறப்பாக ராணுவத்தை அணிவகுக்கச் செய்வதிலும் உலகளவில் பாராட்டப் பெற்றார். உலக வரலாற்றின் மிகவும் குறிப்பிடத்தக்க இராணுவத் தலைவர்களுள் ஒருவராக இவர் கருதப்படுகிறார்.

செங்கிஸ் கான் ஆட்சி:-

1167 - ஆம் ஆண்டு பிறந்த இவரது இயற்பெயர் தெமுசின் போர்சிகின் என்பதாகும். 1187 - ஆம் ஆண்டு செங்கிஸ்கான் என்ற பட்டப் பெயர் பெற்றார். இதற்கு 'அண்டத்தின் சக்கரவர்த்தி' என்பது பொருள். இவர் 1198- ஆம் ஆண்டு தன் தந்தையின் நண்பர்களுடனும் சீனாவைச் சார்ந்த ஜின் என்னும் அரச வம்சத்துடனும் கூட்டணி வைத்துக் கொண்டார். 1200 தொடங்கி 1202 - ஆம் ஆண்டு வரை நடைபெற்ற யுத்தத்தில் தனது குழந்தை பருவ நண்பனான ஜமுகாவை வென்றார். அதே ஆண்டில் டார்டாரையும் வெற்றி கொண்டார். தொடர்ந்து 1206 - ஆம் ஆண்டு மங்கோலிய பேரரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1211 - ஆம் ஆண்டு ஒப்பந்தம் முறிந்ததையடுத்து செங்கிஸ்கானின் படைகள் ஜின் அரச வம்சத்தை முற்றுகையிட்டன. மீண்டும் 1214 - ஆம் ஆண்டு ஜின் அரச வம்சத்துடன் அமைதிக்கான நடவடிக்கை எடுத்தார். ஆனால், தொடர்ந்து வந்த ஆண்டிலேயே ஜின் அரச வம்சத்தைத் தாக்கி அதன் அரசரை நாட்டை விட்டுத் துரத்தினார்.

1216 முதல் 1221 வரையிலான ஆண்டுகளில் மங்கோலிய அரசாட்சியை மேற்கு திசையிலும் விரிவுபடுத்தினார். தற்போதைய ஆப்கானிஸ்தான், ஈராக் வரையிலும். தெற்கு ரஷ்யா வரையிலான பகுதிகளுக்கும் அவர் அரசரானார். 1221 - ஆம் ஆண்டில் ஐலல்-அல்-டின் என்பவரை வென்று தன் இராஜியத்தை உலகில் மிகப்பெரியதாக ஆக்கினார். 1226 - ஆம் ஆண்டு ஜின் அரசன் மீண்டும் தன் படையுடன் செங்கிஸ்கானைத் தாக்கினான். ஆனால், செங்கிஸ்கான் அவனை வென்றார்.

1227 - ஆம் ஆண்டு செங்கிஸ்கான் தனது 65 ஆவது வயதில் இறந்தார். இவரது இறப்புக்கான காரணம் சரியாக அறியப்படவில்லை.

செங்கிஸ்கான் ஒரு மதிப்பீடு:-

சுமார் எண்ணூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்த பேரரசர் என்றாலும் இன்றுவரை செங்கிஸ்கான் மீதான பிரமிப்பும் மிரட்சியும் கொஞ்சம்கூட குறையவில்லை. காரணம், அவரது போர்த்திறன், ஆளுமை, வலிமை. நூற்றாண்டுகள் பல கடந்தாலும் மங்கோலியா என்ற தேசத்தின் ஒரே ஐகான் அவரே.

அவர் பிறந்தது சாதாரணமான ஒரு மங்கோலிய நாடோடிக் கூட்டத்தில். அப்போது மங்கோலியா என்ற ஒரு தேசமே கிடையாது. சிதறிக் கிடக்கும் நாடோடிக் கூட்டங்களை எல்லாம் ஒன்றிணைத்து 'மங்கோலியா' என்ற வலிமையான தேசத்தை உருவாக்க வேண்டும் என்பதே செங்கிஸ்கானின் கனவு. செய்து காட்டினார். தன் துணிச்சலாலும் துடிதுடிப்பாலும் உலகமே அண்ணாந்து பார்க்கும் வகையில் மங்கோலியப் பேரரசையும் அமைத்தார். மாவீரன் அலெக்ஸாண்டரின் பேரரசைவிட செங்கிஸ்கான் அமைத்த பேரரசு நான்கு மடங்கு பெரியது.

அவருக்குப் பின் அவருடைய வாரிசுகள் ராஜ்ஜியத்தை மேலும் விரிவாக்குவதில் பெரும் வெற்றி கண்டனர். கொரியா, ஹங்கேரி, பால்கன், பாக்தாத், மெசபடோமியா, சிரியா என்று அனைத்து திசைகளிலும் மங்கோலியர்களின் ஆதிக்கம்தான். ரஷ்யா, ஐரோப்பியா, சீனா மீதான மங்கோலியர்களின் படையெடுப்புகளும் தொடர்ந்தன. கி.பி. 1260&ல் செங்கிஸ்கானின் பேரனான குபிலாய் கான், மங்கோலிய ராஜ்ஜியத்தின் ஐந்தாவது பேரரசர் ஆனார். கிழக்கு ஆசியாவில் யுவான் பேரரசை உருவாக்கினார். சீனாவின் சாங் பேரரசை வீழ்த்தினார். சீனா முழுவதையும் தன் ஆட்சியின் கீழ்க் கொண்டுவந்த அவர், பெய்ஜிங்கைத் தலைநகராக அறிவித்து அங்கிருந்து ஆட்சி செய்தவர்.