சூரியனின் சிறப்பு செயல்கள்
சூரியனின் சிறப்பு செயல்கள் பராசர முனிவரே! சூரிய மண்டலத்தில் பனி, வெப்பம், மழை இவற்றிற்கு காரணமாக இருக்கக்கூடிய ஏழு கணங்கள் என்பது கந்தர்வர், யக்சர், ராட்சசர், முனிவர், வாலகிலியர், அப்சரசுகள், நாகர் ஆகியோர் என்று கூறினீர்கள். அவர்கள் என்னென்ன செயல்களைச் செய்கின்றார்கள் என்றும் எடுத்து உரைத்தீர்கள். ஆனால் சூரியன் என்ன தொழிலை செய்கின்றார் என்று நீங்கள் உரைக்கவில்லையே. இரத்தத்தில் இருக்கக்கூடிய ஏழு கணங்கள் தான் பனி, வெப்பம், தண்ணீர் முதலியவற்றிற்கு காரணமாக இருக்கின்றது என்றால் சூரியனுடைய தொழில்தான் என்ன? ஒருவேளை நீங்கள் முன்பு உரைத்தது போல சூரியன் தான் மழையை உருவாக்குகிறார் என்று எண்ணிக் கொண்டாலும், சூரியன் உதயத்தில் இருந்து உச்சமாகி பின்பு அஸ்தமனத்தை நோக்கி செல்கின்றார் என்று பார் லோகத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களும் எண்ணுகின்றார்கள். இத்தகைய செயல்கள் அனைத்தும் இந்த ஏழு கணங்களுக்கும் பொதுவாக இருக்குமா? அல்லது சூரியனுக்கு மட்டும்தான் பொதுவாக இருக்குமா? அப்படி இருந்தால் சூரியனின் சிறப்பு என்பது என்ன? என்பதையும் விவரமாக எடுத்து உரைக்க வேண்டும் என்று மைத்ரேய முனிவர் வேண்டினார். பராசர முனிவரும் மைத்ரேயருடைய ஐயங்களை போக்கும் விதத்தில் அவர் வினவிய வினாக்களுக்கு விடையளிக்க தொடங்குகின்றார். அதாவது மைத்ரேயரே ரிக், யஜுர், சாமம் என்ற மூன்று வேத வடிவங்களாக சகல லோகத்திலும் சஞ்சாரம் செய்துகொண்டு, அனைத்து உயிரினங்களிலும் வியாபித்துக் கொண்டிருக்கக்கூடிய ஸ்ரீ விஷ்ணுவின் சக்தியே சூரிய ரூபமாக பிரகாசித்துக் கொண்டு இருக்கின்றது. அந்த ரூபத்தில் இருந்து வெளிப்படுகின்ற சக்தியானது எந்தவொரு காலத்திலும் குறைந்து விடுவதும் இல்லை, வற்றிப் போவதுமில்லை. மாறாக உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து பாவங்களையும் போக்கி கொண்டிருக்கின்றது. உலகத்தில் வியாபித்துக் கொண்டே இருக்கக்கூடிய அனைத்து பாவங்களையும் போக்குவதினாலே அந்த ரதத்தில் இருக்கக்கூடிய ஏழ்வரில் சூரியனே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவர் ஆவார். ஒவ்வொரு மாதத்திலும் அந்த ரதத்தில் இருக்கக்கூடிய சூரியனிடத்தில் மூன்று வேத மயமான ஸ்ரீவிஷ்ணுவின் சக்தியை பெற்று பிரவேசம் செய்கின்றார்கள். விடியற்காலைப் பொழுதில் ரிக் வேதமும், மத்தியான பொழுதில் யஜுர் வேதமும், சாயங்கால பொழுதில் சாமங்களும் சூரியனுடைய சரீரமாக சூரியனுக்கு உள்ளே இருந்து ஸ்ரீ விஷ்ணுவை துதித்துக்கொண்டு இருக்கின்றன. இந்த மூன்று வேதங்களும் பிரம்மாண்ட நாயகனுக்கு சரீரமாக இருக்கின்றன. உலகநாயகனின் சக்தியானது சூரியனுக்கு உள்ளே மட்டும் பிரவேசிப்பது மட்டுமின்றி பிரம்மாதிகளுக்குள்ளும் பிரவேசித்து அவரவர்களுக்கு உண்டான காரியங்களை நடத்திக் கொண்டு இருக்கின்றன. படைப்பின் ஆரம்பத்தில் ரிக் வேதமாக பிரம்மாவும், படைத்த உயிரினங்களை காக்கும் பணியில் யஜுர் வேதமாக ஸ்ரீ விஷ்ணுவும், முடிவில் சாம வேதமாக ருத்ரனாகவும் ஸ்ரீமந் நாராயணனுடைய சக்தியானது பிரவேசித்து கொண்டிருக்கின்றது. முடிவின் பகுதியில் இருப்பதால் ருத்ரன் சம்பந்தமாக இருக்கக்கூடிய சாம வேதம் ஆனது தூய்மை ஏற்றது என்று எண்ணப்படுகின்றது. இவ்விதமாக வேத ரூபமாக ஸ்ரீவிஷ்ணு உடைய சுத்த சாத்வீக சக்தியானது, தனது சரீரமாக இருக்கக்கூடிய ஏழு கணங்களில் கொள்ளும் சூரியன் இடத்திலும் சிறப்பாக பிரவேசித்து இருக்கின்றன. சூரியனிடத்தில் வெளிப்படுகின்ற தேஜஸின் குறைவானது மற்றவர்களை காட்டிலும் சிறப்பாக இருப்பதினால் உலகத்தில் தோன்றி இருக்கக்கூடிய அனைத்து அந்தகாரங்களை (அந்தகாரம் என்றால் இருள் என்று பொருள்) எல்லாம் நாசம் செய்கிறான். இவ்விதமாக வேதமயமாக இருக்கக்கூடிய ஸ்ரீவிஷ்ணுசக்தியின் அனுகிரகத்தினால் சூரியன் பிரகாசமாக ஒளிர்வதை பற்றி முனிவர்கள் துதித்துக் கொண்டும், கந்தர்வர்கள் அழகிய கான பாடல்களை பாடிக்கொண்டும், அரம்பையர்கள் அந்த பாடலுக்கு தகுந்த ஆட்டத்தினால் அங்கிருக்கும் அனைவரையும் மகிழ்வித்துக் கொண்டும், அரக்கர்கள் பின் தொடர்ந்து கொண்டும், நாகர்கள் அவர்கள் அனைவரையும் சுமந்து கொண்டும், வாலகிலியர்கள் உபாசித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அந்த மண்டலத்தின் சக்தி ரூபத்தை தனக்குள் தவித்துக்கொண்டு உள்ள ஸ்ரீமந் நாராயணன் சப்த கணங்களை போல தோன்றுவதும் இல்லை, அழிவதும் இல்லை. சப்த கணங்கள் யாவும் விஷ்ணு இடத்திலிருந்து வேறு பட்டவைகள் ஆகும். இத்தகைய வலிமை கொண்ட சூரியன் பிதுர்கள், தேவதைகள், மானுட பிறப்பு என அனைவரையும் திருப்தி அடைய செய்வது எவ்விதத்தில் எனில் சூரியனிலிருந்து வெளிப்படுகின்ற உஷ்ணம் நிறைந்த கதிர்களினால் அமிர்தமயமாக இருக்கக்கூடிய சந்திரனை கிருஷ்ண பக்ஷத்திலே அக்னி முதலிய தேவதைகள் பானஞ்செய்து மிகுந்துள்ள இரண்டு கலைகளுள் ஒன்றை அமாவாசையில் பித்ருக்கள் பானஞ்செய்கிறார்கள். இதுதான் அவர்கள் திருப்தியடையும் விதமாகும். பூமியிலிருந்து தனது உஷ்ணம் நிறைந்த கதிர்களினால் இழுக்கப்படும் ரதத்தை மீண்டும் மழையாகப் பொழிந்து பயிர்களை விருத்தி செய்து மானுட மற்றும் அதை சார்ந்த மற்ற உயிர்களை சூரியன் திருப்தி செய்து கொண்டு இருக்கின்றார் என்பதை யான் உமக்கு முன்னமே உரைத்து இருந்தேன். இவ்விதமாக சூரியபகவான் தேவர்களுக்கு பக்ஷத்திருப்தியும், பிதுர்களுக்கு மாசத்திருப்தியும், மனுஷ்யாதிகளுக்குத் தினத்திருப்தியும் செய்து வருகிறான். மைத்ரேயரே! இதுவரை சூரியனுடைய சிறப்புகளையும் அவர் மூலம் எவ்விதம் தேவர்களையும், உயிர்களையும் திருப்தி அடைகின்றார் என்பதை நாம் பார்த்தோம். இனி சந்திர மண்டலத்தை பற்றி யான் உமக்கு கூறுகின்றோம்.
