சுவாமிஜியின் அமர்நாத் யாத்திரை
அமர்நாத் யாத்திரை மேற்கொள்ள சுவாமிஜி விரும்பிய போது சீடர்கள் பலரும் உடன் வருவதாகக் கூறினார்கள். சுவாமிஜி நிவேதிதையை மட்டும் அழைத்துச் செல்ல இணங்கினார். சிரத்தையுடன் சுவாமிஜி அனுஷ்டானங்களைச் செய்தார். புனித நீரில் ஸ்நானம் செய்து ஜபம் செய்தார். ஒருவேளை மட்டுமே உணவுண்டு, சிவ சிந்தனையில் மூழ்கியவாறே அவர் யாத்திரையைத் தொடர்ந்தார்.
ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்துக் கொண்டு நூற்றுகணக்கான யாத்திரீகர்கள் அமர்நாத் பயணம் மேற்கொண்டனர். சுவாமிஜியே அவர்களுக்குத் தலைமை ஏற்றது போல, பக்தர்கள் அவரை மதித்துப் போற்றினார்கள். நடுக்கும் குளிர், உடலை வாட்டுவதைப் பொருட்படுத்தாமல் நடந்து சென்று அமர்நாத்தை அடைந்தனர். 'சிவசிவ' என்ற மந்திரம் எங்கும் ஒலித்தவண்ணம் இருந்தது.
குகை நெருங்கியதும் அனைவரும் சென்று தரிசித்த பின்பு கடைசியாக சுவாமிஜி சென்றார். விசாலமான குகையிலே பனி லிங்கமாகக் காட்சியளித்த பரமேஸ்வரனின் திவ்விய தரிசனத்திலே சுவாமிஜி மெய்மறந்து நின்றார். சாஷ்டாங்கமாக சிவபெருமானை நமஸ்காரம் செய்தார் சுவாமிஜி. அவரது உள்ளம் உருகி ஓடியது. அந்த நேரத்தில் தம்மைத் தாமே உணர்ந்தது போல அவருக்குத் தோன்றியது.
"தான் யார் என்பதை நரேந்திரன் அறிந்து கொண்ட பின்பு அவனால் இந்த உடம்பில் வசிக்க முடியாது" என்று குருதேவர் மொழிந்து இருக்கிறார். அது இப்போது விவேகானந்தர் வாழ்வில் நடந்து கொண்டு உள்ளது.
அமர்நாத்தில் சுவாமிஜி தாம் யார் என்பதை உணர்ந்து கொண்ட அனுபவம் அவரை மோனத்தில் ஆழ்த்தியது.
அமர்நாத் யாத்திரை நிறைவடைந்து ஸ்ரீ நகரம் வந்ததும் அவரது உடலை மருத்துவர் பரிசோதித்தபின், " நீங்கள் மரணத்தின் தலைவாயில் வரை போயிருக்கிறீர்கள். இதயமே நின்று இருக்கும் என்று தோன்றுகிறது..." என்று கூறினார்.
சுவாமிஜி, மருத்துவர் சொல்வது உண்மை தான் என்று எண்ணிக் கொண்டார். உடலின் உணர்வுகள் அவரிடமிருந்து விடைபெற்றுக் கொண்டதை அவரையன்றி வேறு எவரும் அத்தருணத்தில் அறியவில்லை.
