சுவாமிஜிக்கு பிடித்த நாய்

சுவாமிஜிக்கு பிடித்த நாய்

bookmark

பேலூர் மடத்தில் சாது சந்நியாசிகளைப் போல சில உயிர்ப் பிராணிகளும் தஞ்சம் அடைந்து இருந்தன. பாகா என்று அழைக்கப்பட்ட ஒரு நாய் மடத்தில் இருந்தது. அது மடத்தில் தன்னிச்சையாகச் சுற்றி, சுற்றி வரும். ஒரு நாள் அதன் தொல்லையை பொறுக்க முடியாத மடத்தின் ஊழியர்கள் அந்த நாயை கங்கையின் அக்கரையில் கொண்டு விட்டுவிட்டு வந்தார்கள்.

அன்று மாலையில் இருந்து பாகா அக்கரையில் இருந்த வண்ணம் கத்துவதும் ஓடுவதுமாக இருந்தது. இரவு நேரம் ஆயிற்று. அக்கரையில் இருந்து போலுருக்கு ஒரு படகு கிளம்பியதும் தாவிப் பாய்ந்து படகில் ஏறிவிட்டது அந்த நாய். அதைத் தண்ணீரில் தள்ளிவிடும் துணிவு இன்றி அந்தப் படகை செலுத்தினான் படகுக் காரன்.

படகானது பேலூர் மடத்தின் அருகே கரையை அடைந்ததும் பாகா துள்ளிக் குதித்து சந்தோஷத்துடன் மீண்டும் ஓடியது. மடத்தில் எல்லா இடங்களிலும் சுற்றிவிட்டு எவரும் அறியாதவண்ணம் சுவாமிஜியின் அறையின் வெளிப்புறத்தில் சாதுவாகப் படுத்துக் கொண்டது. தன்னுடைய வருகையைத் தெரிவிக்க ஒரு குறிப்புச் சத்தத்தைக் கூட அது வெளியிடவில்லை.

மறுநாள் காலையில் சுவாமிஜி எழுந்து அறைக்கு வெளியில் வந்ததும் அவருடைய காலடியில் வாலை ஆட்டியபடி குழைத்துக் கொண்டு அன்பு மொழியில் 'கர்புர்' என்று கத்திக் கொண்டு அவருடைய விழிகளையே பார்த்தவாறு நின்று இருந்தது.

பாகாவின் செயலையும் அதன் கண்களில் தெரிந்த பரிதாப உணர்ச்சியையும் பார்த்து சுவாமிஜியின் உள்ளத்தில் தயை பெருகியது. அதனைப் பரிவு பொங்கத் தடவிக் கொடுத்தார். அன்று முதல் பாகா சுவாமிஜியின் செல்ல நாயாக மாறியது.

சுவாமிஜியின் அன்புக்கு உரிய அந்த நாய் இறந்த பிறகு அதற்கு ஒரு நினைவுச் சின்னத்தை எழுப்பினார்கள் சீடர்கள்.