சுவாமிஜிக்கு தக்கசமயத்தில் உதவிய அமெரிக்கப் பெண்மணி
பளிச்சென்று ஒரு காவி உடை, மிக உயர்ந்த கம்பீரமான தோற்றம்; அற்புதமாக ஒளி வீசும் கண்கள்; அந்தப் பார்வையிலேயே ஒரு காந்த சக்தி. இளமை ததும்பும் அழகிய முகம். இவ்வாறாக சிகாகோ மகாநாட்டு மேடையிலே அமர்ந்து இருந்த அத்தனைப் பிரதிநிதிகளிலும் இவர் ஒருவரே தனித் தன்மையுடன் அனைவரையும் ஈர்க்கச் செய்யும் ஞானப் பொலிவுடனும் திகழ்ந்தார்.
மகாநாட்டுத் தலைவர் டாக்டர் பெர்ரோஸ், ஒவ்வொரு பிரதிநிதியாக அழைத்து அவைக்கு அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் எழுந்து சென்று சபையினர் முன்பு, தாங்கள் எழுதிக் கொண்டு வந்து இருந்த உரையைப் படித்தார்கள்.
சுவாமிஜி ஒவ்வொருவர் பெற்று இருந்த பட்டங்களையும் பதிவிகளையும் பொறுப்புகளையும் அறிந்தார். அவர்களுக்கு முன்னாள் தாம் என்ன பேசப் போகிறோம் என்ற அச்சம் அவரைச் சூழ்ந்து கொண்டது.
எல்லோரும் தங்களுடைய உரையை எழுதிக் கையில் வைத்து இருந்தார்கள் ஆனால் சுவாமிஜி எந்தவித முன்னேற்பாடும் செய்து கொள்ளாமலே சபையில் பேசவிருந்தார்.
டாக்டர் பெர்ரோஸ் சுவாமிஜியைப் பார்த்து, "பேசுகிறீர்களா?" என்று இரண்டு முறை அழைத்தார். சுவாமிஜிக்கு இன்னும் மனத்தில் தெம்பு பிறக்கவில்லை. ஆகையால் "பிறகு பேசுகிறேன்" என்று கூறிவிட்டார்.
சுவாமிஜி, எப்படியும் தம்முடைய முறை வரத்தான் போகிறது. என்ன பேசுவது எப்படிப் பேசுவது என்று எண்ணிய போது அவருடைய நா உலர்ந்து போயிற்று.
வாக்தேவியான கலைவாணியை தியானம் செய்தார். மனமுருகி வேண்டினார். பின்பு தலைவரின் அழைப்பை ஏற்றுப் பேசத் துவங்கினார்.
"சகோதிரிகளே, சகோதரர்களே" என்று சபையில் முதல் வார்த்தையாக கூறி தனது பேச்சை ஆரம்பித்தார். நிலத்தாலும் மொழியாலும் மாறுபட்டவர்களை உடன் பிறந்த சகோதர சகோதரிகளே என்று அழைத்ததைக் கேட்டு, அமெரிக்க நாட்டின் சிகாகோ நகரத்தின் கொலம்பஸ் ஹாலில் கூடியிருந்த ஏழாயிரம் பேரும் செய்த கரகோஷம் அடங்க வெகு நேரம் ஆயிற்று. அக்கணம் கலைவாணி அருள் செய்ய, இசை போன்ற உரையைக் கேட்டவர்கள் அனைவரும் சுவாமிஜியின் அறிவாற்றலைக் கண்டு மெய்சிலிர்த்துப் போனார்கள். பல அமெரிக்கர்கள் அந்த மேடைப் பேச்சால் சுவாமிஜியின் ரசிகர்கள் ஆனார்கள்.
விவேகானந்தர் தனது பேச்சை முடித்துக் கொண்டதும் பலர் அவரை வாய்விட்டுப் பாராட்டினார்கள். அப்போது விவேகானந்தர், "ஆண்டவன் ஆற்றல் அளித்தான்; என் பணியை சரியாகச் செய்ய முடிந்தது" என்று கர்வம் கொள்ளாமல் கூறினார். அத்துடன் மகாநாடு முடிந்த பிறகு, சிகாகோ நகரத்துப் பிரமுகர்கள் அனைவரும் சிவாமிஜியை தத்தம் இல்லங்களுக்கு வர வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
