சுவாமிஜிக்கு கப்பலில் வந்த கடும் கோபம்
கப்பலில் தாயகம் திரும்பிக் கொண்டு இருந்தார் சுவாமிஜி. பயணம் செய்தவர்களில் கிறிஸ்துவமதப் பிரசாரகர்கள் இருவர் இருந்தார்கள்.
அவர்களுக்கும் சுவமிஜிக்கும் வாதம் ஏற்பட்டது. இந்து மதத்தின் மேன்மைகளைக் குறித்து சுவாமிஜி தெள்ளத் தெளிவான கருத்துக்களை அவர்கள் முன்பு வைத்தார்.
தர்க்கம் செய்ய இயலாமல் அந்தப் பிரசாரகர்கள் தோற்றுப் போனார்கள். ஆத்திரமுற்ற அவர்கள், இந்து மதத்தை இகழ்ந்து பேசத் தொடங்கினார்கள். வாதம் செய்து வெல்லத் திறமை அற்றவர்களுடன் தாம் வாதிட்டது தவறு என்று எண்ணிய சுவாமிஜி, அவர்களுடைய இழிவான பேச்சைப் பொருட்படுத்தாமலே இருந்தார்.
சுவாமிஜியின் மௌனத்தைச் சீண்டி விடுவது போல அவர்கள் இருவரும் இந்து மதத்தைப் பற்றிக் கேவலமாகப் பேசத் தொடங்கினார்கள்.
சுவாமிஜியின் பொறுமை வரம்பு கடந்தது. மல்யுத்தமும் குதிரையேற்றமும் கற்று இருந்த அவரது உடலின் பலத்தை அவர்கள் அறிந்து இருக்கவில்லை.
தங்களுடைய மதத்தை உயர்த்துவதற்க்காகப் பிற மதங்களை இழிவுபடுத்துவது தவறு என்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்று சுவாமிஜி விரும்பினார். அவர்களை நெருங்கி, சட்டையைப் பிடித்து ஒரு உலுக்கு உலுக்கினார்.
"இன்னொரு முறை என்னுடைய மதத்தைப் பற்றி இழிவாகப் பேசினால், உங்களைத் தூக்கி கடலில் வீசி விடுவேன்" என்றும், "மதத்திற்குக் களங்கம் கற்பித்தால் நிச்சயம் நீங்கள் கடலில் தள்ளப்படுவீர்கள்" என்றும் எச்சரித்தார். அப்போது அது கேட்டு அந்த இரு மதப்பிரசாரகர்களும் நடுநடுங்கிப் போனார்கள். தங்களை விட்டுவிடும் படியும், தெரியாமல் செய்த பிழையை மன்னிக்குமாறும் வேண்டிக் கொண்டதுடன் "இனி இவ்வாறு செய்யமாட்டோம்" என்று உறுதிமொழி தந்த பிறகே சுவாமிஜியின் வலிமையான கரங்கள் அவர்களை விடுவித்ததன. அதன்பிறகு அவ்விருவரும் சுவாமிஜியின் நண்பர்கள் ஆனார்கள்.
பெற்ற அன்னையைப் போல நாம் நமது மதத்தையும் போற்ற வேண்டும் என்பார் சுவாமிஜி.
