சுந்தர சோழன்
சோழ நாட்டின் இழந்த பகுதிகளை மீட்பதில் வெற்றி பெற்றவன் 957 இல் பட்டத்துக்கு வந்த சுந்தர சோழன் ஆவான். இவன் இராட்டிரகூடர்களைத் தோற்கடித்தது தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியதுடன், பாண்டியர்களையும் வெற்றி கொண்டான். எனினும், பகைவர் சூழ்ச்சியால் பட்டத்து இளவரசனான, சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டான். ஆதித்த கரிகாலனின் பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக, இராசகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது.
அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த அநிருத்த பிரமாதிராசன் என்பவன் இவனுக்கு அமைச்சராய் இருந்தவன். கருணாகர மங்கலம் என்ற ஊரினை இறையிலியாக அவனுக்கு அளித்த செப்பேடுகளே அன்பில் செப்பேடுகள் ஆகும்.
