சினத்தின் கேடு
சினங்கொள்வார் தமைத்தாமே தீயாற் சுட்டுச்
செத்திடுவா ரொப்பாவார்;சினங்கொள் வார்தாம்
மனங்கொண்டு தங்கழுத்தைத் தாமே வெய்ய
வாள்கொண்டு கிழித்திடுவார் மானு வாராம்.
தினங்கோடி முறைமனிதர் சினத்தில் வீழ்வார்,
சினம்பிறர்மேற் றாங்கொண்டு கவலையாகச்
செய்ததெணித் துயர்க்கடலில் வீழ்ந்து சாவார். 8
மாகாளி பராசக்தி துணையே வேண்டும்.
வையகத்தில் எதற்கும் இனிக் கவலை வேண்டா;
சாகா மலிருப்பதுநம் சதுரா லன்று;
சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார்மேல்;
பாகான தமிழினிலே பொருளைச் சொல்வேன்.
பாரீர்நீர் கேளீரோ,படைத்தோன் காப்பான்;
வேகாத மனங்கொண்டு களித்து வாழ்வீர்
மேதினியி லேதுவந்தால் எமக்கென் னென்றே. 9
