சித்திரகூடப் படலம் - 2186

bookmark

2186.    

‘அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால்,
படரும் நல் அறம் பாலித்து, இரவியின்
சுடரும் மெய்ப் புகழ் சூடினென் என்பது என்?
இடர் உனக்கு இழைத்தேன் நெடு நாள்’ என்றான்.

     ‘அடரும் செல்வம் அளித்தவன் - நெருங்கிய அரசச் செல்வத்தை
எனக்குஅளித்தவனாகிய தயரதனது; ஆணையால்- கட்டளையால்; படரும்
நல் அறம் பாலித்து -மேலும் மேலும் பரவிச் சென்று பிறவிதோறும்
விளைவதாகிய நல்ல தருமத்தைப் பாதுகாத்து (வனம்புகுத்து);  இரவியின்
சுடரும் - சூரியனைப் போல ஒளிவீசி விளங்கும்; மெய்ப் புகழ்-
உண்மையான புகழை; சூடினென் என்பது என்?- நான் மேற்கொண்டேன்
என்பதனால் யாது பயன்?; உனக்கு-; நெடுநாள் இடர் இழைத்தேன் -
பல நாள் துன்பத்தைச் செய்தேன்;  என்றான் -  என்று  மனம் வருந்திக்
கூறினான்.

     ‘தயரனது சத்தியவாக்கைக் காப்பாற்ற வனம் புகுந்து  புகழ் சூடினேன்
ஆயினும், ஒரு பாவமும்அறியாத தம்பியான உனக்கு வனத்தில் என்னோடு
அலைவதாகிய துன்பத்தை நெடுநாளாக இழைத்துள்ளேனே’என்று  இராமன்
இரங்கியதாகக் கொள்க. பிறருக்குத் துன்பம் செய்து தனக்குப் புகழ் உண்டாக
நடப்பது  அறநெறி ஆகுமா என்றான் இராமன்.                     52