சித்தர் காலம்
சித்தர்களின் காலத்தைக் குறிப்பிடும் ஆவணங்கள் தொகுக்கப்படாததனால், சித்தர் வரலாற்றை அறிந்துகொள்வது கடினமாக இருக்கிறது. ஆனால், சித்தர்களின் மரபை அறிந்துகொள்ள போதிய அளவு ஆவணங்கள் கிடைக்கின்றன.
ஆதிநாதர்:
தமிழ் மருத்துவத்தின் அங்கமாகிய சித்த யோக மருத்துவ முறைகளைத் தோற்றுவித்தவர் ஆதிநாதர் என்று "ஹடயோக பிரதீபிகை” குறிப்பிடுகிறது.
வடநாட்டு நாதாந்த சித்தர்களுக்கு யோகமுறைகளைக் கற்பித்தவர் ஆதிநாதர். ஆதிநாதர் என்னும் பழமையான பெயர் சிவனைக் குறிக்கிறது.
சித்தர் சிவன்:
உருத்திரன் என்றழைக்கப்பட்ட திராவிட இனத்தைச் சேர்ந்த சிவனே முதல் மருத்துவனாகவும், சிறந்த மருத்துவனாகவும் ரிக் வேதத்தினால் அடையாளம் காட்டப்படுகிறான். (ரிக் வேதம் – 2-33.4)
சித்தர் சிவபெருமானே முதல்சித்தர் என ரிக் வேதத்தில் கூறப்பட்டுள்ளதால், சிவபெருமானைப் பற்றிய குறிப்புகளையே சித்தர் வரலாற்று ஆவணமாகக் கருதலாம்.
கி.மு.5000 ஆண்டளவிலான நடராசர் உருவ முத்திரை ஈரானில் (மெசபடோமியா) கிடைத்துள்ளது.
கி.மு. 4000 ஆண்டளவிலான சிவபெருமானை வழிபடும் தமிழ்க் கல்வெட்டு போர்ச்சுகல் நாட்டில் கிடைத்துள்ளது.
சிந்து சமவெளியில் சிவன் யோக நிலையிலிருக்கும் முத்திரை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நந்தீசர்:
நந்தீசர் சிவன் – உமாதேவி மகன் என்கிறார். ஆகவே சிவனுக்குச் சமகாலத்தவராகவே நந்தீசரையும் குறிப்பிடலாம்.
திருமூலர்:
நந்தீசர் திருமூலரின் ஆசிரியர் என்பதால், நந்தீசர் காலமும் திருமூலர் காலமும் ஒன்றெனலாம்.
போகர்:
திருமந்திரச் சிறப்புப்பாயிரத்தில் போகரைப் பற்றிய குறிப்பு காணப்படுவதாலும், திருமூலரின் நூலைக் கண்டே 7000 இயற்றினேன் என்று போகர் கூறுவதாலும் போகர் திருமூலருக்குச் சமகாலத்தவர் எனலாம்.
சீனமொழியில் போகர் வரலாற்றுச் செய்தி:
போகர் பிறப்பால் தமிழர் எனவும், அவர் இறந்த பிறகு ஒரு சீனர் உடலில் புகுந்து சீனத்துக்கு வந்து ’தவ் [Taoism]’ மதத்தை தோற்றுவித்தார் எனவும் குறிப்புகள் இருக்கின்றன.
காலாங்கிநாதர்:
போகரின் ஆசிரியர் காலாங்கி நாதர் என்பதால், போகரின் காலமே காலாங்கி நாதரின் காலம் எனலாம்.
புலிப்பாணி:
கலியாண்டு தமிழரின் தொடராண்டு முறையாக விளங்கியது. கலியாண்டு கி.மு.3102 இல் தொடங்குகிறது. இக்கலியாண்டு 205 இல் புலிப்பாணிச் சித்தர் வாழ்ந்தார் என்னும் குறிப்பு (புலிப்பாணி வைத்தியம் – 500. பா.145) காணப்படுவதால் இவர் கி.மு.2897 இல் வாழ்ந்தார் எனலாம்.
கருவூரார், கொங்கணவர், சட்டைமுனி, இடைக்காடர்
போகர் சீனாவுக்குச் செல்லுமுன், கருவூரார், கொங்கணவர், சட்டைமுனி, இடைக்காடர் ஆகிய இவர்களுக்கு ஆசிரியராக இருந்தார் என்பதால், இவர்களும் கி.மு.2897 ஆண்டளவில் வாழ்ந்தனர் எனலாம்.
கோரக்கர் சித்தர்:
சோழநாட்டில் காவிரி நதிக்கரைக்கு அருகில் அமைந்துள்ள பரூர்ப்பட்டியில், பரிவிருத்தி நானூற்றெட்டு, ஐப்பசித் திங்கள், தசமி திதி, பரணி நாளில் சமாதி அடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறார். இவ்வாண்டைக் கலியாண்டாகக் கொண்டால் கி.மு. 2674 உம், கொல்லம் ஆண்டாகக் கொண்டால் கி.பி. 1233 ஆகிறது. கோரக்கர் திருமூலரையும் அகத்தியரையும் குறிப்பிடுவதால் கொல்லம் ஆண்டாகக் கருத முடியாது. எனவே, கோரக்கர் கி.மு. 2694 ஆம் ஆண்டு என்று கொள்வதே சரியாக இருக்கும்.
எனவே, சித்தர் களின் காலத்தைத் தனித்தனியே காணும் போதில் குழப்பமே மேலிடுகிறது. ஆனால், சித்தர் மரபின் காலம் கி.மு. 5000 த்தில் தொடங்கியது என்பதே சரியாகும்.
