சல்லிக் கட்டு

bookmark

நாட்டுப்புற மரபில் வீர விளையாட்டாகக் கருதிப் போற்றப்படுவது சல்லிக் கட்டு ஆகும். தமிழர் திருநாளாம் தைத்திருநாளின் ஓர் அங்கமாக ஊர்கள் தோறும் சல்லிக் கட்டு வெகு விமரிசையாக நடத்தப்படுவதுண்டு. எருது கட்டு, மஞ்சு விரட்டு, ஏறு தழுவுதல், மாடு பிடித்தல் என்று பல பெயர்களில் வழங்கப் பெறும் இவ்விளையாட்டினைப் பார்ப்போம். முரட்டுக் காளைகளை விரட்டிப் பிடித்து வீரத்தை வெளிப்படுத்தும் போட்டி விளையாட்டாக, சல்லிக் கட்டு நிகழ்த்தப் படுகின்றது. சல்லிக் கட்டில் பயன்படுத்துவதற்கு என்றே காளைகள் வளர்க்கப்பட்டு, அவற்றிற்குப் பயிற்சி அளிக்கப் படுகின்றது. இவ்வாறு பயிற்சி பெற்ற காளைகள் சல்லிக் கட்டு நடைபெறும் இடங்களுக்கு அழைத்து வரப்பட்டு, போட்டிக்கு விடப்படுகின்றன. காளைகள் வாடி வாசல் என்ற பகுதியிலிருந்து வெளிக்கிளம்பி எதிர்ப்பட்டோரை எல்லாம் முட்டித் தள்ளியும் மிதித்தும் ஓடிவரும். காளைகளின் போக்கை அறிந்த, காளைகளைப் பிடிக்கப் பயிற்சி பெற்ற, காளைகளின் சாகசம் அறிந்த இளைஞர்கள் சீறிவரும் காளைகளின் மீது துணிச்சலாகப் பாய்ந்து திமிலை இறுகப் பற்றியோ, கொம்பைப் பிடித்து மடக்கியோ அடக்குவர். அனுபவமில்லாத சிலர் காளைகளால் காயப்படுவதுமுண்டு. காளைகளைப் பிடித்து அடக்கியோருக்குப் பலவிதமான பரிசுகள் வழங்கப் பெறும். தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சல்லிக் கட்டு மிகவும் பிரபலம். பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்திலுள்ள அலங்கா நல்லூரில் ஆண்டு தோறும் சல்லிக் கட்டு விழாவைத் தமிழக அரசே ஏற்று நடத்துகிறது. உலகின் பல நாடுகளிலும் காளைகளோடு தொடர்புடைய விளையாட்டுகள் நிகழ்த்தப்பட்டு வந்தாலும், தமிழரின் மறப் பண்பாட்டைப் பறை சாற்றும் சல்லிக் கட்டு தனிச் சிறப்புடையது என்பதைப் பார்த்தோர் அறிவர்.