சந்திர மண்டலம்

bookmark

சந்திர மண்டலம் சந்திரனுடைய தேரானது மூன்று சக்கரங்களைக் கொண்டு இருக்கக்கூடியதாகும். தேரில் பத்து குதிரைகள் கட்டப்பட்டிருக்கும். அந்த குதிரைகள் யாவும் முல்லைப்பூ வர்ணத்தில் அமைந்திருக்கும். துருவனை ஆதாரமாகக் கொண்டு வேகமாக சுற்றிக் கொண்டிருக்க கூடியதாகும். சூரிய கிரணங்களுக்கு எவ்விதத்தில் அமைந்திருக்குமோ அவ்விதத்திலேயே சந்திரனுக்கும் அமைந்திருக்கும். உதயாதி காலங்களில் குறைவும், வளர்ச்சியும் ஏற்படுகின்றது. சூரிய ரதத்தில் இருக்கின்ற குதிரைகளைப் போன்று ஜலத்தில் பிறந்த சந்திர ரதத்தின் குதிரைகள் அனைத்தும் கல்பத்தின் தொடக்கத்தில் ஒரே முறை ரதத்தில் கட்டப்பட்டு பின்பு அந்த கல்பம் முடியும் வரை இருக்கக்கூடியவையாகும். சந்திரனின் அமிர்த பானத்தை தேவர்களால் பானம் செய்யப்பட்டு மீதி இருக்கக்கூடிய ஒரு கலையோடு இருக்கக்கூடிய சந்திரன் ஒவ்வொரு நாளைக்கும் ஒரு கலையாக வளர்ந்து நிற்கின்றான். இவ்விதமாக வளர்கின்ற சந்திரன் அறை மாதத்தில் நிறைக்கப்படுகின்ற அமிர்தமானது முப்பத்து மூவாயிரத்து முந்நூற்று முப்பத்தி மூன்று அமுதபானர்களாகிய தேவதைகள் பானம் செய்கின்றனர். இவ்விதம் தேவர்களால் பானம் செய்யப்பட்டு இரண்டு கலைகள் மிகுந்தவனாய் இருக்கக்கூடிய சந்திரன், சூரிய கிரணங்களில் மறைவதால் சூரிய மண்டலத்தில் பிரவேசித்தவன் போல் நின்று அவன் அமை என்ற கிரணத்தில் வாசம் செய்கிறான். அதனால் அந்த நாளானது அமாவாசை என்று அழைக்கப்படுகின்றது. அந்த நாள் இரவு பகல்களில் சந்திரன் முந்தித் தண்ணீரிலும், பிந்திக்கொடி முதலியவைகளிலும் இருந்து பின்பு சூரியனை அடைகிறான். ஆகையால் அந்த நாளில் மண்ணுலகில் வாழ்பவர்கள் எவராக இருந்தாலும் செடி, கொடி முதலியவற்றைச் சோதித்தல் மற்றும் அதனுடைய இலையை உதிர்த்தாலும் பிரம்மஹத்தி செய்த பாவத்தை அடைவார்கள். சந்திரன் இடத்தில் மிகுந்து இருக்கக்கூடிய அந்த ஒரு கலையை அமாவாசையில் பித்ருக்கள் அமிர்தபானத்திற்காக உபாசித்து அமிர்த மயமாக இருக்கக்கூடிய அந்த பதினைந்தாம் கலையை பானம் செய்கின்றார்கள். பித்ருக்கள் சௌமியர் என்றும், பர்ஹிஷதர் என்றும், அக்னிஷ்வாத்தர் என்றும் மூன்று பிரிவினராக இருக்கிறார்கள். அமாவாசையில் மிகுதியாக இருக்கக்கூடிய சந்திரனின் ஒரு கலையை உண்டு பித்ருக்கள் முழுவதும் அந்த மாதத்தில் திருப்தி அடைகின்றார்கள். இவ்விதமாக சந்திரன் தேவர்களுக்கும் அமிர்தத்தை அளிக்க கூடியவனாகவும் குளிர்ச்சி நிறைந்தவனாகவும் இருக்கின்றான். சந்திரன் ஒரு மாதத்தில் இரு வேறு பணிகளையும் நிரம்ப திருப்தியாக செய்கின்றார். அதாவது சுக்ல பட்சத்தில் தேவதைகளையும், கிருஷ்ண பட்சத்தில் பித்ருக்களையும் திருப்தி செய்து மண்ணுலகில் புல், பூண்டு, செடி, கொடிகளை உருவாக்குவதிலும் தன்னுடைய குளிர்ச்சியான ஒளிக்கதிர்களை கொண்டு பூமியில் வாழ்கின்ற மானுட, மிருக பட்சிகளை திருப்தி செய்கின்றார். மண்ணுலகில் வாழ்கின்ற அனைத்து உயிரினங்களுக்கும் குளிர்ச்சியான கதிர்கள் மூலம் மகிழ்ச்சியை ஏற்படுத்துகின்ற சந்திரனுக்கும் புதல்வன் ஒருவர் இருக்கின்றார். அவர் தான் புதன் ஆவார். புதன் : புதனுடைய தேரானது வாயு மற்றும் அக்னி முதலியவற்றால் உருவாக்கப்பட்டவை ஆகும். இந்த ரதத்தில் இருக்கக்கூடிய பொன்னிறமான எட்டுக் குதிரைகள் பூமியில் பிறந்த வகைகளாகும். வரூதம் என்ற முன்தாங்கும் உறுப்பும், அனுகர்ஷம் என்ற அடிப்பகுதியை தாங்கும் உறுப்பும், பதாகை முதலிய அவயவமும் கொண்டதாகும். அங்காரகன் (செவ்வாய்) : அங்காரகனுடைய தேரானது வாயு மற்றும் அக்னி முதலியவற்றால் உருவாக்கப்பட்டவை ஆகும். இந்த ரதத்தில் அக்கினியிற் பிறந்து பத்மராகம் போலச் சிவந்த எட்டு குதிரைகள் கட்டியதாய் மிக மிகப் பெரியதாய் விளங்கும். குரு : தேவர்களுக்கெல்லாம் குருவாக இருக்கக்கூடிய பிரகஸ்பதியின் தேரும் எட்டு குதிரைகளால் பிணைக்கப்பட்டு இருக்கும். அந்தத் தேரில் ஏறிய குருபகவான் ஒரு வருடம் முழுவதும் சஞ்சரிப்பார். சுக்கிரன் : சுக்கிரனுடைய தேரானது வாயு மற்றும் அக்னி முதலியவற்றால் உருவாக்கப்பட்டவை ஆகும். இந்த ரதத்தில் இருக்கக்கூடிய பொன்னிறமான எட்டுக் குதிரைகள் கட்டியதாய், மிகப்பெரியதாய், பொன்மயமானதாய் விளங்கும். வரூதம் என்ற முன்தாங்கும் உறுப்பும், அனுகர்ஷம் என்ற அடிப்பகுதியைத் தாங்கும் உறுப்பும், பதாகை முதலிய அவயவமும் கொண்டதாகும். சனி : சனிபகவான் ஆகாயத்தில் இருக்கக்கூடிய சித்திர வர்ணமான ரதத்தில் ஏறி மற்ற கிரகங்களைக் காட்டிலும் மிகவும் மெதுவாக சஞ்சாரம் செய்கின்றார். ராகுவின் தேரானது மற்றவர்களின் தேரினை விட வெண்ணிறம் கொண்டதாய் எட்டுக் குதிரைகள் பூட்டிய அமைப்பாக இருக்கும். இந்த ரதத்தில் ஏறிய ராகு சூரியனுக்கு மேலே இருக்கக்கூடிய அந்தகார மயமான இருள் சூழ்ந்த பகுதியில் மூன்றாவது ஸ்தானத்தில் சஞ்சரித்து கொண்டு பருவகாலங்களில் அவ்விடத்திலிருந்து திரும்பி வந்து பூமி முதலியவற்றின் நிழல்களில் புகுந்து சூரிய சந்திரர்களை மறைத்து கிரகணங்களை ஏற்படுத்துகின்றான். அதைப்போலவே கேதுவின் ரதத்திலும் புகை வர்ணம் உடைய எட்டுக் குதிரைகள் கட்டப்பட்டு இருக்கும். ராகு எவ்விதத்தில் செயல்பட்டு பூமியில் கிரகணங்களை ஏற்படுத்துகின்றாரோ அதைப் போலவே கேதுவும் கிரகணங்களை ஏற்படுத்துகிறார். இவ்விதமாக சூரியன் முதலிய நவகிரகங்களில் ரதங்கள் அமைந்திருக்கக்கூடிய இந்த கிரக நட்சத்திர மண்டலங்கள் அனைத்தும் வாயு ரூபமாக இருக்கக்கூடிய கயிறுகளின் துருவனோடு இணைக்கப்பட்டு தத்தமது சாரத்தில் சுழல்கின்றன. ஆகாயத்தில் இருக்கக்கூடிய மண்டலங்கள் அனைத்தும் நம்முடைய ஊனக் கண்களுக்கு அகப்படாத காற்றினால் உருவாக்கப்பட்ட கயிற்றினால் கட்டப்பட்டு, தன்னையும் சுற்றிக்கொண்டு தனக்கு ஆதாரமாக இருக்கக்கூடிய துருவனையும் சுற்றி வருகின்றன. இந்தப் பிரபஞ்சம் என்பது நமது விழிகளுக்கு உட்பட்டு மட்டும் செயல்படுவதன்று. கண்ணுக்குப் புலப்படாத பலவிதமான ஆச்சரியங்களையும், அதிசயத்தையும் கொண்டிருக்கக்கூடியதாகும். அந்த வகையில் நமது கண்களுக்கு புலப்படாத காற்றினால் உருவாக்கப்பட்டு இருக்கக்கூடிய அந்த கயிற்றுக்கு பிரவகம் என்ற பெயர் தோன்றியது. இதுமட்டுமின்றி யான் உனக்கு முன்பே உரைத்தது போல சிம்சுமாரா துருவ அவதாரத்தைப் பற்றி உமக்கு கூறினேன் அல்லவா. அதைப்பற்றி இப்பொழுது நான் விரிவாக உமக்கு எடுத்துரைக்கிறேன். அதையும் கேட்டு அறிந்து கொள்வாயாக. யாவருக்கும் காட்சி அளிக்கக்கூடிய அந்த சொரூபத்தை எவன் ஒருவன் காண்கிறானோ அவன் அன்றைய நாளில் பகல் பொழுதில் செய்த அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான். அதுமட்டுமல்லாது அந்த சக்கரத்தில் எத்தனை நட்சத்திரங்கள் இருக்கின்றனவோ? அத்தனை ஆண்டுகள் இந்த பூலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அவன் சுகமாக ஜீவித்து இருப்பான். நட்சத்திர ரூபங்களாக இருக்கக்கூடிய சில தேவதைகள் அதனுடைய அவயமாகவும் இருக்கின்றார்கள். அந்தச் சிம்சுமாரத்துக்கு உத்தானபாதன் மேல் வாயிலிலும், யக்ஞன் கீழ்வாயிலிலும், தருமன் சிரத்திலும், நாராயணன் இதயத்திலும், அஸ்வினி தேவதைகள் கால்களிலும், வருணனும், அயர்மாவும் பின் தொடைகளிலும், சம்வச்சரம் குறியிலும், மித்திரன் அபானத்திலும், அக்னியும், மகேந்திரனும், காசிபனும், துருவனும் முறையே வாலிலும் உள்ளனர். இந்த அக்னி முதலிய நான்கு நட்சத்திரங்களும் மற்ற அவயங்களிலுள்ள நட்சத்திரங்களைப் போல் அஸ்தமனமாகாமல் எப்போதும் காணப்படுவன. மைத்ரேயரே! நீங்கள் என்னிடம் வினவியது போல பூமியின் தோற்றம் மற்றும் அதன் இருப்பையும் அதில் இருக்கக்கூடிய மலைகளின் தோற்றம் மற்றும் கடல்கள், தேசங்கள் ஆகியவற்றின் அமைப்பையும், விண்வெளியில் இருக்கக்கூடிய கிரகம் மற்றும் நட்சத்திரங்களின் தோற்றம் மற்றும் அதன் இருப்பையும் பற்றி கூறினேன். அதனுடைய சுருக்கத்தை பற்றி எடுத்து உரைக்கின்றேன் அதையும் கேட்பாயாக! விஷ்ணுவின் சரீரமாக இருக்கக்கூடிய ஜலம் யாதுண்டோ அதிலிருந்து தாமரைப் பூவைப் போன்ற நாம் வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய இந்த பூமியானது பருவத சமுத்திரங்கள் உடன் தோன்றியது. அதன் காரணமாகவே நாம் இன்றும் வாழ்ந்து கொண்டு, நமக்கு அடைக்கலமாக இருந்து கொண்டிருக்கக்கூடிய இந்த பூமியானது அவருடைய சரீரமே ஆகும். இதுமட்டுமல்லாது சூரியாதி ஜோதிகளும் பூமி முதலிய உலகங்களும், வனங்களும், மலைகளும், திசைகளும், நதிகளும், ஆழ்கடல்களும் என்றும் இருக்கின்றதென்று சொல்லத்தக்க சித்தும் மாறுவதனாலே இல்லையென்று சொல்லத்தக்க அசித்தும் யாவுமே அந்த ஸ்ரீவிஷ்ணுவின் சரீரங்களாக இருக்கின்றன. தன்னுடைய வடிவங்கள் யாவற்றிலும் ஞானமே முழு உருவாக கொண்டு சகல உயிரினங்களையும், ஜீவராசிகளையும் சரீரமாக கொண்டிருக்கக்கூடிய எங்கும் வியாபித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ விஷ்ணு பகவானுக்கு ஞானமே சுத்தஸ்வரூபமேயல்லது தேவமனுஷ்யாதி ரூபமன்று. அதன் காரணமாகவே பர்வத சமுத்திர பூமியில் ரூப பேதங்கள் யாவற்றிலும் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய ஜீவராசிகள் உடைய கர்ம வசத்தால் உண்டான ஞானபேதத்தைப் பற்றியவைகளாகும். இப்படிப்பட்ட ஞானமயமான தனது சொரூபம் சுத்தமானதாகத் தோன்றும், சகலமும், கர்மமூலமான நினைப்பின் பேதத்தினாலே வௌ;வேறு விதமாகத் தோன்றுவதாகுமேயன்றி இயல்பாகவே அவ்வஸ்துக்களில் அந்தந்த பேதங்கள் இருக்கமாட்டாது. ஞானமயமான பொருளே நிலையானதாகையால் அஸ்தி என்று உள்பொருளாய் கூறப்படும். பூமியில் தோன்றிய எந்தவொரு பொருளுக்கும் ஆதியும், அந்தமும் முடிவும் இல்லாமல் இருப்பது என்பது இல்லை. ஒரு பொருளில் எந்தவொரு மாற்றத்தையும் அடையாமல் இருப்பதும் பூமியில் இருப்பதில்லை. ஒரு பொருள் தன்னைத்தானே அடிக்கடி மாற்றிக் கொண்டே இருந்தால் அதில் உண்மையும் இருப்பதில்லை. யான் உமக்கு கூறியவற்றில் பலவிதமான குழப்பங்கள் இவ்விடத்தில் தோன்றியிருக்கக்கூடும் என்பதை நான் நன்கு அறிவேன். இதை உமக்கு புரிகின்ற விதத்தில் நான் உனக்குக் கூறுகிறேன். முதலில் பிரித்திவியானது மண் உருண்டையாகி பின்பு ஒரு குறிப்பிட்ட வடிவமாக மாற்றமடைந்து நீர் சேமிக்கும் குடமாக மாறுகின்றது. குடமாக மாறிய அந்த மண் உருண்டையானது உடையவும் கூடும். உடைந்த அந்த துண்டுகள் காலப்போக்கில் மிகச் சிறு துகள்களாக மாறி அதற்குப் பிறகு அதை விட மிக மிகச் சிறியதாக அதாவது அணுவாக மாறுகின்றது. இவ்விடத்தில் இங்கு நிகழக்கூடிய அனைத்து நிகழ்வுகளும் ஆத்ம சொரூப யதார்த்தம் என்பதை புரிந்து கொள்ள இயலாத தேவ மானுஷ ரூபங்கள் தங்களிடத்தில் அனுபவிக்கக்கூடிய வௌ;வேறு பொருளாக எடுத்துக் கொள்கின்றார்கள். அவர்கள் எடுத்துக் கொள்ளும் இதில் எதை வஸ்துவென்று சொல்லலாம் என்று எண்ணினால், ஞான காரணமான ஆன்ம வஸ்துவை தவிர வேறு எதுவும் இவ்விடத்தில் சொல்லத்தக்க அளவில் வஸ்துவாக இருக்க முடியாது. அந்த ஞான காரகம் என்பது அனைவருக்கும் ஒன்றுபோல தோன்றுவதில்லை. காரணம் யாது என்றால் அவரவர்கள் செய்த கர்ம வினைகளுக்கு ஏற்ப மாறுபட்ட சித்தம் கொண்ட ஜனங்களுக்கு தேவாதி சரி கீழ பிரவேசத்தை நாள் அந்தந்த ரூபமாக தோற்றமளிக்கின்றது. ஆன்ம ஸ்வரூபமானது இயல்பில் கர்மமில்லாததும், அதனால் வருகின்ற பிரகிருதி சம்பந்தமான மலமில்லாததும், அதனால் உண்டாகத்தக்கதான சோஹ மோஹலோ பாதி தோஷ சம்பந்தம் இல்லாதும், தேய்வு வளர்ச்சி முதலியன இல்லாமையால் ஒரே ரூபமானதுமாய் இருக்கிறது. இத்தகைய தன்மை கொண்ட ஞான ரூபமான ஆத்ம ஸ்வரூபமே என்பது ஸ்ரீ நாராயணனுடைய சொரூபமாகும். இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்து இடங்களிலும் பரவி இருக்கக்கூடிய அனைத்து அணுக்களாக அவருடைய சொரூபமாக இருப்பதினால் அது தன்மயமாக இருக்கின்றது. அந்த ஸ்ரீவாசுதேவராத்மகம் ஆகாத பொருள் ஒன்றுமில்லை. மைத்ரேய முனிவரே! இந்த விதமாக ஞானஸ்வரூபம் என்பது நித்தியமாக இருக்கின்றது. ஆகையால் சத்திய பதார்த்தம் என்றும், மற்றது மாறி மாறி அழிவதனாலே அசத்தியம் என்றும் உண்மையை உமக்குச் கூறினேன் என்று பராசர முனிவர் கூறினார். பராசர மகரிஷியே என்னிடத்தில் தோன்றிய பலவிதமான ஐயங்களான பூமி, கடல், நதிகள், கிரகங்கள் முதலியவற்றின் ஸ்வரூபங்களையும், மூன்று உலகமும், ஸ்ரீவிஷ்ணுவையே ஆதாரமாகக் கொண்டு நிலைபெற்றிருப்பதையும், ஞானஸ்வரூபமே முக்கியமானது என்பதையும் நீங்கள் தான் எமக்கு விளக்கியருளினீர்கள். பரத மாமன்னனது சரிதத்தை பின்னர் எடுத்து உரைப்பதாக எம்மிடத்தில் கூறினீர்கள் அல்லவா! அவருடைய வரலாற்றினை பற்றி இப்பொழுது எடுத்து உரைக்க வேண்டும் என்று வேண்டினார்.