சங்க காலத் தமிழர் நாணயங்கள்

bookmark


தமிழர், நாணயச் செலாவணி முறையை அறிந்திருந்ததோடு தாமே நாணயங்களை உருவாக்கிப் புழக்கத்தில் விட்டனர். சங்க காலம் முதல் சோழர், பாண்டியர் காலங்கள் வரையிலுமான பழங்கால நாணயங்கள் பல கிடைத்துள்ளன. பொதுவாக நாணயங்களில் உலோகங்களைப் பயன்படுத்தியுள்ளனர். அதன் வகை, தரம் முதலியன மக்களின் உற்பத்தித் திறனையும் அவர்களது பொருளாதார நிலையையும் எடுத்துக்காட்டும். மேலும், நாணயங்கள் கிடைக்கின்ற இடத்தை வைத்து உரிய மன்னனின் நாட்டு எல்லை, வணிகத் தொடர்பு முதலியவற்றைக் கணிக்கலாம். சில நாணயங்கள் வணிகர்கள், பொற்கொல்லரின் அமைப்புகளால் ஆட்சியாளர்களின் ஒப்புதலோடு வெளியிடப்பட்டன.

வாணிகமும் கைவினைத் தொழிலும் பெற்றிருந்த முதன்மைத்துவம் இதனால் வெளிப்படுகிறது. நாணயங்களில் அரசன், தெய்வங்களின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. சமயச் சின்னங்களும் அவற்றில் இடம்பெறுகின்றன. இவை அக்காலத்தின் கலைகளையும் சமயங்களையும் அறிந்துகொள்ள உதவுகின்றன.

நாணயத்தின் மதிப்பு அகமதிப்பு, புற மதிப்பு, தொன்மை மதிப்பு என்று பகுக்கப்படுகிறது. நாணயம் என்பது வணிகப் பொருளாக மட்டுமின்றி, அது வெளிவந்த காலத்தின் நாகரிகம், பொருளாதாரம், கலாசாரம், வரலாற்றுத் தகவல்களை தெரிவிக்கும் ஊடகமாக உள்ளது. வைகை, நொய்யல், தென்பெண்ணை, தாமிரபரணி,பவானி, காவிரி, ஆறுகளின் ஓரம் மண் அரிப்புக்காரர்களிடமிருந்தும், அமராவதி, ஆந்திரா, சித்தூர், மைசூரு நகரங்களின் பாழடைந்த கோட்டை, கோவில் போன்ற இடங்களில் இருந்தும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காசுகள் கிடைத்துள்ளன.

தமிழகத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் அனைவருமே தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்தும்,புலி, மீன், குதிரை, காளை, சிங்கம் போன்ற விலங்குகள், பறவைகள், மற்றும் சமயம் சார்ந்த உருவம் பொறித்த நாணயங்களை வெளியிட்டுள்ளனர்.

களப்பிரர்கள் காசு அவ்வளவாக தமிழ்நாட்டில் கிடைக்கவில்லை. ஆந்திராவில் அகஸ்டஸ் டைபீஸ் என்ற ரோமானிய மன்னன் கி.மு.40ல் வெளிவந்த நாணயங்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தில் தற்போது அதிகம் கிடைக்கும் தொன்மையான நாணயம் ராஜராஜன் காலத்து காசுகள் தான். கி.மு.ஒன்றாம் நூற்றாண்டு வரையிலும் ரோமானிய செம்பு காசுகள் கிடைத்துள்ளது. முகலாய மன்னர் அக்பர் ராமர், சீதை உருவம் பொறித்த நாணயங்களும், ஹைதர் அலி, திப்புசுல்தான் ஆட்சியில், சிவன்- பார்வதி உருவம் பொறித்த நாணயங்களும் வெளிவந்துள்ளன. ஆற்காடு நவாப் ஆட்சியில், அதிக அளவில் சைவ, வைணவ கடவுள்களான சிவன், விஷ்ணு, கணபதி, முருகன், அனுமன் நாணயங்களை வெளியிடப்பட்டுள்ளன. இது அவர்கள்ஆட்சிக் காலத்தில் நிலவிய மத ஒற்றுமைக்கும், சகிப்புத்தன்மைக்கும் சான்றாக உள்ளது