சங்க காலத்தில் தமிழர்கள்

bookmark

சங்க காலம் (Sangam period) என்பது பண்டைய தென்னிந்திய வரலாற்றில் நிலவிய தமிழகம் தொடர்பான ஒரு காலப்பகுதியாகும். இக்காலப்பகுதி கிமு மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கிபி நான்காம் நூற்றாண்டு வரை நீடித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மதுரையை மையமாகக் கொண்டு தமிழ்ப்புலவர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர் என்ற காரணத்தால் இக்காலப்பகுதிக்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

"ஓங்கிய சிறப்பின் உயர்ந்த கேள்வி

மாங்குடி மருதன் தலைவன் ஆக,

உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின்

புலவர் பாடாது வரைக, என் நிலவரை;" -- ( புறம்:72 )

என்று பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பாடியுள்ள புறநானூற்றுப் பாடல் வரிகளே இத்தகைய புலவர்கள் கூட்டம் இருந்ததற்குச் சான்றாகும்.

முற்காலத் தமிழ் மொழியில் தமிழகம் என்ற சொல் 168 ஆவது புறநானூற்றுப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் என்று குறிக்கப்பட்ட இப்பகுதி முழுவதுமாக தமிழ்மொழி பேசும் மக்கள் வாழும் பகுதியாகும். தற்பொழுது இப்பிரதேசம் தோராயமாக தற்காலத் தென்னிந்தியா என்பதாக அறியப்படுகிறது. இத்தென்னிந்தியப் பகுதியில் தமிழ்நாடு, கேரளா , ஆந்திரப்பிரதேசம் சில பகுதிகள், கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகள், இலங்கை முதலிய பகுதிகளும் அடங்கும்.

தென்னிந்திய புராணங்களில் காணப்படும் கூற்றுகளின்படி, முற்காலத் தமிழகத்தில் தலைச் சங்கம், இடைச் சங்கம் மற்றும் கடைச் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது. இம்முச்சங்கங்களில் மூன்றாவது சங்க காலமான கடைச்சங்கக் காலத்தையே வரலாற்றாசிரியர்கள் சங்ககாலமாக எடுத்துக் கொள்கின்றனர். முதல் இரண்டு சங்கங்களும் புராணங்களில் புகழ்பெற்று வாழ்பவை என்றே கருதுகின்றனர். ஒவ்வொரு சங்கத்திலும் அச்சசங்க காலத்திற்கென சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்டு தோற்றம் கண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. கல்வெட்டுகள, சங்க இலக்கியங்கள், மற்றும் தொல்பொருள் தரவுகள் ஆகியவையே தென்னிந்தியாவின் ஆரம்ப கால வரலாற்று ஆதாரங்களாக திகழ்கின்றன.

சுமாராக கி.மு 1400 மற்றும் கி.பி. 1500 ஆண்டுகளுக்கு இடையேயான காலத்தில், தமிழகத்தில் சேர,சோழ பாண்டியப் பேரரசுகள் இருந்துள்ளன. இவைதவிர வேளிர் போன்ற சில சுயாட்சி தலைவர்கள் ஆட்சியும் தமிழகத்தில் இருந்துள்ளது. அத்துடன் பழந்தமிழகத்தின் வரலாறு, தமிழர்களின் சமூக-அரசியல் சூழல் பண்பாட்டு வழக்கங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளடங்கிய சொத்துக்களாக இலக்கியம் மற்றும் கல்வெட்டுகள் திகழ்கின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலம், தொன்மைக் காலம், இடைக்காலம் என்று மூன்று காலப் பிரிவுகளாகப் தமிழக வரலாறு பிரிக்கப்பட்டுள்ளது.