சகோதரி நிவேதிதை விவேகானந்தரை சந்தித்தல்

சகோதரி நிவேதிதை விவேகானந்தரை சந்தித்தல்

bookmark

சமுதாயத்திற்கு சேவை புரிய வேண்டுமென்ற தணியாத தாகம் மார்கரெட் நோபிள் என்ற பெண்மணிக்கு இருந்தது. இவளது தந்தை தமது மரணத் தருவாயில், இவளை பற்றி தனது மனைவியிடம் இப்படியாகச் சொன்னார்: "இவள் அறிய செயல்களை செய்யவே பிறந்தவள். இவளை ஆண்டவன் அழைக்கும் போது மறுக்காமல் அனுப்பிவிடு" என்று. அவ்வாறு தந்தையால் கூறப்பட்ட மார்கரெட் நோபிள், அயர்லாந்தில் பிறந்தவள். இளம் வயதில் தந்தையை இழந்தவள். அதிக கஷ்டங்களுக்கு இடையில் படித்தாள். அறிவு கொண்டு உழைத்தாள். தனது திறமையால் சிறுவயதிலேயே ஒரு பெரும் பள்ளியை தலைமை பொறுப்பில் இருந்து நடத்தினாள். மணம் முடிக்க எண்ணி இருமுறை முயன்றாள். ஆனால் ஒவ்வொரு முறையும் மணம் செய்து கொள்ள முடியாதபடி தடையேற்பட்டது. அதனால் மார்கரெட் நோபிள் மனம் உடைந்தாள். அச்சமயத்தில் அவளுடைய பள்ளி ஆசிரியர் சுவாமி விவேகானந்தரைப் பற்றி எடுத்துச் சொன்னார்.

அப்போது இஸபெல் என்னும் பெண்மணியின் வீட்டில் சுவாமிஜி தங்கியிருந்தார். அவரைக் காண மார்கரெட் நோபிள் சென்றாள். மாலை நேரம். சுவாமிஜியைச் சுற்றி இருந்த அனைவரும் அமைதியாக அமர்ந்து இருந்தார்கள். சுவாமிஜி சிறிது நேரத்தில் கண் மலர்ந்தார்.

சுவாமிஜியின் திவ்ய தேஜசும் கருணைப் பார்வையும் முகத்தில் தவழ்ந்த சாந்தமும் மார்கரெட் நோபிளின் துயருற்ற மனத்தில் அமைதியை ஏற்படுத்தின. சுவாமிஜியின் ஞான ஒளியிலே அந்தத் துன்பங்கள் பொசுங்கி விட்டதைப் போல உணர்ந்தாள். அச்சமயம் மார்கரெட் நோபிள் ஒரு பதுமை போல அமர்ந்தவாறு அங்கே நிகழ்வதில் மனத்தை நிலைப்படுத்தினாள்.

அங்கு இருந்தவர்கள் சுவாமியிடம் தங்கள் சந்தேகங்களைக் கேட்க, அவர் அழகாக, ஆழமாக, அற்புதமாகப் பதில் அளித்துக் கொண்டு இருந்தார். அவர் இடை இடையே பொழிந்த இசை மயமான சமஸ்கிருத ஸ்லோகங்கள், கேட்பவரின் நெஞ்சங்களில் பக்தியைத் தோற்றுவித்தன.

மார்கரெட் நோபிள் அன்றே ஒரு முடிவுக்கு வந்து விட்டாள். சுவாமிஜியின் சிஷ்யை ஆகிவிட வேண்டும் என்ற முடிவு தான் அது. அந்த முடிவை சுவமிஜியிடமே கூறினாள் மார்கரெட் நோபிள்.

சுவாமிஜி அவளுக்கு தீட்சை வழங்க பின்னாளில் மார்கரெட் நோபிள் தான் 'சகோதரி நிவேதிதை' (நிவேதிதை என்றால் 'தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு' எனும் பொருள்படும்) ஆனார்.

சகோதரி நிவேதிதை ஒரு சிறு குறிப்பு:-

சகோதரி நிவேதிதா (அக்டோபர் 28, 1867 - அக்டோபர் 13, 1911), (இயற்பெயர்:மார்கரெட் எலிசபெத் நோபல்), சமூக சேவகியும் எழுத்தாளரும் ஆசிரியையும் சுவாமி விவேகானந்தரின் முதன்மை சீடரும் ஆவார். ஆங்கில - ஐரியப் பெண்ணான இவர் 1895 ஆம் ஆண்டில் இலண்டனில் விவேகானந்தரை சந்தித்து அவருடைய கொள்கைகளால் கவர்ந்திழுக்கப்பட்டு 1898 ஆம் ஆண்டு ஜனவரி 28 இல் இந்தியாவில் கல்கத்தா நகருக்கு வந்தார். நிவேதிதையை வரவேற்க சுவாமி விவேகானந்தரே துறைமுகத்திற்குச் சென்றிருந்தார். மார்ச் 28, 1898 ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சைக் கொடுக்கும் போது விவேகானந்தர் தெய்வத்திற்கு அர்ப்பணிப்பு எனும் பொருள்படும் நிவேதிதா என்ற பெயரை அளித்தார். (இவ்வாறு இந்து சமயத்தில் தீட்சை வழங்கப்பட்ட முதல் மேற்கத்திய பெண் இவர் என்று சொல்லப்படுகிறது) கடினமான உழைப்பு மற்றும் தவ வாழ்வால் உடல் நலன் பாதிக்கப்பட்டு அக்டோபர் 13, 1911 அன்று டார்ஜிலிங்கில் மறைந்தார்.

நிவேதிதையின் கடைசி நிமிடங்கள்:-

உபநிடதத்தில் வரும் ருத்ரப் பிரார்த்தனை ஒன்று நிவேதிதைக்கு மிகவும் பிடித்தது. மரணம் அவளை நெருங்கிக் கொண்டிருந்த போது அந்தப் பாடலை அடிக்கடிப் பாடினாள்.

அந்தப் பாடல்

" ஓம் அஸதோ மா ஸத் கமய தமஸோ மா ஜ்யோதிர் கமய

ம்ருத்யோர் மா அம்ருதம் கமய ஓம் சாந்தி: சாந்தி:சாந்தி"

பொருள் - உண்மையற்றதிலிருந்து எங்களை உண்மைக்கு அழைத்துச் செல்வாயாக, இருளிலிருந்து எங்களை ஒளிக்கு அழைத்துச் செல்வாயாக மரணத்திலிருந்து எங்களை மரணம் இல்லாப் பெருவாழ்வுக்கு அழைத்துச் செல்வாயாக

மேகமூட்டமான அந்த நாட்களில் டார்ஜிலிங்கில் சூரிய தரிசனம் கிடைப்பது மிகவும் அபூர்வம். ஆனால் அக்டோபர் 13, காலை ஏழு மணி சமயம் சூரியன் ஒளிவீசினான். அதைப் பார்த்த படி நிவேதிதை 'பழுதடைந்த இந்தப் படகு மூழ்கிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் என்னால் சூரியோதத்தைக் காண முடிகிறது என்றார். பிறகு அவர் ஆவி பிரிந்தது.

இவர் வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்ச்சிகள்:-

1898 ஆம் ஆண்டு மார்ச் 11-இல் நிவேதிதையை கல்கத்தாவாசிகளுக்கு அறிமுகப்படுத்துவதற்காக சுவாமி விவேகானந்தர் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.

1898 ஆம் ஆண்டு மார்ச் 17-இல் அன்னை சாரதாதேவியை சந்தித்தார். இந்நிகழ்வை அவர் 'பொன்னான நாள்" என்று குறிப்பிடுகிறார். அன்னை சாரதா தேவி, அவர்களை வரவேற்று உரையாடி மகிழ்ந்தார். மொழி புரியாத போதும் அன்னையின் இனிமையை புரிந்து கொள்ள அவரால் முடிந்தது. அன்னையுடன் உரையாடுவதற்காகவே நிவேதிதை வங்காள மொழியை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.

சுவாமி விவேகானந்தர், நிவேதிதையை பயிற்றுவித்தல் :-

சுவாமி விவேகானந்தர், நிவேதிதையை சிறப்பாகப் பயிற்றுவித்தார். பயிற்சி மூன்று முக்கிய அம்சங்கள் கொண்டவையாக அமைந்தது. அதில் முதல் படி இந்தியாவை அறிந்து கொள்வது, அடுத்ததாக ஆன்மீகக் குறிக்கோள் மற்றும் சாதனைகள், கடைசியாக கற்பிப்பதற்கான செயல்முறைத் திட்டம்.

(i)    இந்தியாவை அறிந்து கொள்வது

இந்திய வரலாறு, அதன் மன்னர்கள், துறவிகள், வீரர்கள் தியாகிகள் என்று சுவாமி விவேகானந்தர் இந்தியாவைப் பற்றி விளக்கியிருந்தும், இங்கிலாந்து இந்தியாவிற்கு பேரளவு நன்மை செய்வதாகவே இங்கிலாந்தில் இருந்த போது கேள்விப்பட்டிருந்த நிவேதிதைக்கு இங்கிலாந்து இந்தியாவிற்கு இழைத்த தீமைகள் தெரியாத ஒன்று. ஆங்கில ஆட்சியின் தீமைகளை சுவாமிஜி கூறியபோது அவற்றை நம்ப அவள் மனம் முதலில் மறுத்தது. மேலும் பல துறைகளிலும் தனிக் கருத்து கொண்டிருந்தார் நிவேதிதை. இது சுவாமிஜியின் கருத்துக்களை நிவேதிதைப் புரிந்து கொள்வதைக் கடினப்படுத்தியது. சிறிது காலத்திற்குள் தமது சந்தேகங்கள் பொய்யானவை என்பதைப் புரிந்து கொண்டு பணிவாக இருப்பது என்று முடிவெடுத்தார் நிவேதிதை.

(ii)    ஆன்மீகக் குறிக்கோள் மற்றும் சாதனைகள்:-

எளிய, தூய, புனித வாழ்வு வாழ்வதுடன் அனைத்து உயிர்களையும் இறைவனாகக் கருதி அவர்களுக்குப் பணி செய்தல் எனும் கோட்பாடுகளை உணர்ந்து செயலாக்க முனைந்தார் நிவேதிதை. இதற்கு விவேகானந்தர் வழி காட்டினார்.

(iii)    கற்பிப்பதற்கான செயல்முறைத் திட்டம்:-

இந்தியாவிற்கு நிவேதிதை வந்ததன் முக்கிய காரணம் கற்பிப்பது. அதில் சுவாமி விவேகானந்தர் படிப்படியாக தொண்டு செய்யவே வந்துள்ளதையும் மற்றவர்களை விடப் பெரிய அறிவாளிகள் என்றோ அவர்களைக் கைதூக்கி விடும் உயர்ந்தோராகவோ நினைத்துக் கொள்ளாதிருப்பதன் அவசியத்தைப் புகட்டினார். மேலும் தொண்டு செய்ய வேண்டியிருக்கும் மக்களினத்தை அறிந்திருப்பதன் அவசியத்தையும் மேனாட்டுக் கருத்துக்களை திணிக்காதிருப்பதன் அவசியத்தையும் நிவேதிதைக்கு அறிவுறுத்தினார்.