கோலங் காண் படலம் - 1243

bookmark

தயரதன் தன் மாளிகையை அடைதல்

தரசதன் முதலியோர் இருப்பிடம் செல்லலும்
கதிரவன் மறைதலும்
 
1243.    

சொற்ற பொழுதத்து. அரசர்
   கைதொழுது எழ. தன்
ஒற்றை வயிரச் சுரி கொள்
   சங்கின் ஒலி பொங்க.
பொன்-தடமுடிப் புது
   வெயில் பொழிதர. போய்.
நல் தவர் அனுச்சை கொடு.
   நல் மனை புகுந்தான்.
 
சொற்ற   பொழுதந்து-  (இங்ஙனம்  கோசிக  முனிவன்)   கூறிய
பொழுதில்;  அரசர்  கைதொழுது  எழ  -  (தசரதன்)   மற்றையரசர்
எல்லோரும்  தன்னைக்  கைகூப்பி  அஞ்சலி   செய்து  எழவும்;  தன்
ஒற்றை வயிரச் சுரிகொள் சங்கின்  ஒலிபொங்க  -  தனக்கு  உரிய
ஒப்பற்ற வயிரப் பூண்  அணிந்த. உள்சுழிகின்ற  (வெற்றிச்) சங்கின் ஒலி
பொங்கியெழவும்; பொற்றடமுடிப் புது வெயில் பொழிதரப் போய் -
பொன்னாலான  (தன்) அகன்ற  மணிமகுடம்  இளவெயில்  வீசச்சென்று;
நல்தவர் அனுச்சைகொடு நல்மனை புகுந்தான் -சிறந்த முனிவர்களின்
இசைவைப்   பெற்றுக்கொண்டு    (தனக்குரிய)   சிறந்த  மாளிகைக்குச்
சென்றடைந்தான். 

நில  அரசர்கள் எழுந்து நின்று விடைதர. தவஅரசர்களைப் பணிந்து
நின்று  அனுமதி  வேண்டி  விடைபெற்றான்  எனக்   கூறி.  தசரதனின்
வீரமும்  அருளின்  ஈரமும் தோற்றுவித்த  திறம் உணர்க.  அனுச்சை -
அநுமதி. இசைவு.                                           42