கோலங் காண் படலம் - 1239

bookmark

சீதையின் மகிழ்ச்சி ((1239-1240))

1239.     

கருங் கடை நெடுங் கண் ஒளி
   யாறு நிறை கண்ணப்
பெருங் கடலின் மண்ட. உயிர்
   பெற்று இனிது உயிர்க்கும்.
அருங் கலன் அணங்கு-அரசி.
   ஆர் அமிழ்து அனைத்தும்.
ஒருங்குடன் அருந்தினரை
   ஒத்து. உடல் தடித்தாள்.
 
கருநெடுங் கண்கடை ஒளியாறு நிறை- கருத்து  நீண்ட கண்ணின்
கடைப்  பகுதியிலிருந்து  இராமனை   நோக்கிப் பாய்ந்த  ஒளிவெள்ளம்
ஆகிய  ஆறு; கண்ணப்  பெருங்கடலின்  மண்ட -  இராமபிரானின்
மேனி  யென்னும்  கடலிற்  போய்ச் சங்கமிக்க; உயிர் பெற்று -  ஐயம்
அனைத்தும்  நீங்கி. கன்னி  மாடத்தில்  கண்டவனே  இவன்  என்னும்
துணிவால். (ஊசலாடிய உயிர்) புத்துயிர்ப்பெய்தி; இனிது உயிர்க்கும்  -
வெய்துயிர்த்தல் நீங்கி.  இனிமைதவழும்  மூச்செறிந்தாள்;  அருங்கலன்
அணங்கு   அரசி    -     பிறர்க்கு     அரிய    அணிகலன்களை
யணிந்துள்ள  தெய்வமங்கையாகிய சீதை; ஆர்அமிழ்து   அனைத்தும்
ஒருங்கு  உடன்   அருந்தினரை   ஒத்து   உடல்   தடித்தாள் -
(பேருவகையால்) பெறுதற்கு  அரிய   அமிர்தம்  முழுவதையும்  (தாமே)
உண்டவரைப் போன்று உடம்பு பூரித்தாள்.

இராமனின்    திருமேனி. பிராட்டிக்குக் கடலுமாயிற்று. அதிற் பிறந்த
அமிழ்தும்   ஆயிற்று.  ஆகவே.  இராமன்   திருமேனி.   பிராட்டிக்கு.
“திருக்கண்ணமுது” ஆயிற்று என்க.                            38