கோலங் காண் படலம் - 1235

bookmark

இராமன் முதலிய சிலர் தவிர ஏனையோர்
சீதையை வணங்குதல்

1235.

நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும்.
வையம் நுகர் கொற்றவனும். மா தவரும். அல்லார்
கைகள் தலைபுக்கன; கருத்துளதும் எல்லாம்
தெய்வம் என உற்ற; உடல் சிந்தை வசம் அன்றோ?
 
நைவளம் நவிற்று மொழி நண்ண வரலோடும்-நைவளம் என்னும்
குறிஞ்சி  யாழ்ப்  பண்ணின்   வகையாகிய   நட்டபாடைப்பண்  போல
இனியமொழிபேசும்  பிராட்டி. அருகே  நெருங்கி  வருகின்ற  அளவில்;
வையம்   நுகர்  கொற்றவனும்   மாதவரும்  அல்லார்   கைகள்
தலைபுக்கன -பூவுலகை ஆண்டு. அதன் (இன்பதுன்பங்களை) நுகர்கின்ற
தசரத வேந்தனும் (வசிட்டன். விசுவாமித்திரன்)  ஆகிய முனி  சிரேட்டர
களும் அல்லாத அனைவர்  கரங்களும்  (பிராட்டியை  வணங்குமுகமாக)
அவரவர்   தலைகளின்  மேலே   (இயல்பாகவே)  சென்று   குவிந்தன;
கருத்து. உளதும் எல்லாம்  தெய்வம்  என  உற்ற  -  ஏன் எனில்.
அனைவரது   மனமும்.   மற்றும்   உள்ள   புத்தி  முதலிய   அந்தக்
கரணங்கள்  யாவையும்   (பிராட்டியைத்)   தெய்வம்  என்றே  கருதின;
உடல்  சிந்தை   வசம்  அன்றோ?  -  (செயல்கருவியாகிய)  உடல்
(எண்ணுதற் கருவியாகிய) மனத்தின் வசப்பட்டுச் செயல்படுவதன்றோ?  

வையம்  நுகர்  மாதவர் என்பதில். இரட்டுற மொழிதலாகக் கொண்டு
இராமனையும்   சனகனையும்  அடக்குவர்.  கருத்தும் (மற்றும்)  உளதும்
எல்லாம்  எனற்பாலது  உம்மை   விகாரத்தால்  தொக்கு  கருத்துளதும்
எல்லாம்  என்றாகியது.  பிராட்டியைத்  தெய்வம் எனத்  தான்  கருதும்
கருதுகோளை.  இடம்  அறிந்து   ஏற்றி.  வணங்குவித்த  கவிஞர்பிரான்
திறம்  உணர்க.  உளதும் எல்லாம் - ஒருமை பன்மை  மயக்கம்.  சீதை
வணங்குரியார்  சிலர்  தவிர. அவையிருந்த  ஏனையோர்  அனைவரின்
கரங்களும்   சிரமேற்  குவிந்தன   என்பதற்கு.  உளநூல்   அறிஞரான
கவிஞர் பிரான் கூறும் காரணம்: உடல்  சிந்தை  வசம் என்பது.  சிந்தை
சீதையைத்   தெய்வம்   என   நினைக்க.   கடையுடைக்   காவலாளர்
(மெ.நா.9)    அனைவோர்   கரங்களும்    தெழுது    செயற்படுத்தின.
மனந்தூயதாயின்.  ஒழிந்த  மொழியும்  செயலும்   தாமே   தூயவாகும்
எனும்  அடிப்படையில்  “மனத்துக்கண்  மாசிலன் ஆதல்”  (திருக். 34)
என மொழிந்தமையும் இங்கு நினைக.                           34