கோலங் காண் படலம் - 1232
சீதையைக் கண்ட இராமன் வியப்பு
1232.
‘நறத்து உறை முதிர்ச்சி உறு
நல் அமுது பில்குற்று.
அறத்தின் விளைவு ஒத்து. முகடு
உந்தி. அருகு உய்க்கும்.
நிறத் துவர் இதழ்க் குயில்
நினைப்பினிடை அல்லால்.
புறத்தும் உளதோ?” என
மனத்தொடு புகன்றான்.
நறத்து உறை முதிர்ச்சி உறு நல்அமுது பில்குற்று - தேனில்
உறைகின்ற இனிமை முற்றி வளைவது போன்று இனிமைதரும் நல்ல
தேவாமுதத்தைத் துளித்து; அறத்தின் விளைவு ஒத்து -
அறச்செயல்கள் முற்றிவிளைகின்ற விளைவினைப் போன்று; முகடு
உந்தி அருகு உய்க்கும் - (நலம் அனைத்தும் தந்து) (அக
கன்னிமாடத்தின்) உச்சியிலிருந்து இறங்குவித்து என் அருகே
செலுத்தப் பெற்றிருக்கும்; துவர் நிற இதழ்க்குயில் - செந்நிறங்
கொண்ட இதழ்களையுடைய குயில் ஒன்று; நினைப்பின் இடை
அல்லால் புறத்தும் உளதோ? என மனத்தொடு புகன்றான்- என்
மனத்தின் இடத்தில்தான் இருந்தது. அப்படியன்றி. அக்குயில்
வெளியேயும் உள்ளதோ எனச் சீதையை அருகில் கண்ட இராமபிரான்
தன் மனத்தோடு கூறிக்கொண்டான்.
பில்குதல் - சிந்துதல். தேன்எனும் பொருளதாகிய ‘நற’ எனும்
சொல் அத்துச் சாரியை பெற்று. ‘நறத்து’ என வந்தது. சீதை போன்ற
அரியபொருள் அறத்தின் விளைவால் அன்றி எய்துதல் அரிது
என்பது கவிஞர் பிரானின் கருத்து. கன்னி மாடத்துக் கண்ட காட்சி.
கணப்போதும் நீங்காது தன் உளத்திருந்தது என்பது தோன்ற. “முகடு
(மாடி) உந்தி அருகுய்க்கும் குயில்” என்றான். “அன்று
அம்மாடத்து உம்பர் அளிக்கும் அமுது அன்னாள்”
(கம்ப. 505) என முன்பும் கூறினார். மாடக்குயில் மனக்குயில்
ஆயிற்று. அந்த அகக்குயில் இப்போது கண்காணும் புறக்குயிலும்
ஆயிற்றோ என வியந்தவாறு - குயில் - உவம ஆகுபெயராய்ச்
சீதைக்காயிற்று. விடாது ஒரு பொருளை நினைத்திருப்பார் முன்பு.
நினைத்த பொருள்போல் பிற பொருள்களின் வடிவும் தோன்றல்
உலகியல்பு. “நோக்குவ வெல்லாம் அவையே போறல்” (தொல். களவு.
9) என்று இதனைச் சுட்டுவர் தொல்காப்பியனார். 31
