கோலங் காண் படலம் - 1229

bookmark

சீதை மண்டபத்தை அடைதல்

1229.

பொன்னின் ஒளி. பூவின் வெறி.
   சாந்து பொதி சீதம்.
மின்னின் எழில். அன்னவள்தன்
   மேனி ஒளி மான.
அன்னமும். அரம்பையரும்.
   ஆர் அமிழ்தும். நாண.
மன் அவை இருந்த மணி
   மண்டபம் அடைந்தாள்.
 
அன்னவள் தன் மேனி ஒளி - அந்தச் சீதை. தன்  உடலில் எழும்
பொலிவுக்கு; பொன்னின் ஒளி. பூவின்  வெறி. சாந்து பொதி சீதம்.
மின்னின்   எழில்மான   -   பொன்னின்    ஒளியையும்.    பூவின்
மணத்தையும்.   சந்தனத்துக்  குளிர்ச்சியையும்.  மின்னலின்  அழகையும்
ஒப்புச் சொல்லுமாறு;  அன்னமும்  அரம்பையரும்  ஆர் அமிர்தும்
நாண  -  (தன்   நடைக்குத்  தோற்று)   அன்னப்  பறவையும்.  (தன்
அழகுக்குத்  தோற்று)  தெய்வ  உலகப் பெண்டிரும். (தன் இனிமைக்குத்
தோற்று) அரிய தேவ அமுதமும் வெட்கமுறுமாறு; மன் அவை இருந்த
மணி  மண்டபம்  அடைந்தாள் - அரசவையில் அமைந்திருந்த மணி
மண்டபத்தை அடைந்தாள்.  

பொன்னின்      ஒளியும்.     பூவின்   நறுமணமும்.  சந்தனத்துக்
குளிர்ச்சியும்.   மின்னலின்   அழகும்  இயல்பாகவே   ஒன்று   கூடிய
சேர்க்கை  பிராட்டியின் திருவுடற் பொலிவு என்றவாறு. தன்   வருகைச்
செயல்   ஒன்றால்  பலவற்றின்  தோல்வியை  அறிவித்து   வருகிறாள்
என்பார்.   “அன்னமும்  அரம்பையரும்  ஆர்  அமிழ்தும்   நாண.....
மண்டபம் அடைந்தாள்” என்றார்.                             28