கோலங் காண் படலம் - 1228

bookmark

1228.    

கற்றை விரி பொற்கடை பயிற்றுறு கலாபம்
சுற்றும் மணி புக்க இழை மிக்கு. இடை துவன்றி.
வில் தவழ. வாள் நிமிர. மெய் அணிகள் மின்ன.
சிற்றிடை நுடங்க. ஒளிர் சீறடி பெயர்த்தாள்.
 
கற்றை  விரி பொற் கடை பயிற்றுறு கலாபம்  -  ஒளிக்கதிர்கள்
விரிகின்ற   பொன்னைக்   கடைந்ததனால்   எழுகின்ற  ஒளி   மிகும்
பதினாறு கோவையணியும்;  இடை  சுற்றும்  மணிபுக்க இழை மிக்கு.
துவன்று  -  (தன்)  இடையைச் சுற்றிலும் மணிகள் இழைக்கப்பட்டுள்ள
மற்றை  அணிகலன்களும்  மிகுந்து நெருங்கி; வில் தவழ. வாள் நிமிர
மெய் அணிகள் மின்ன - அவற்றின் ஒளி எங்கும் பரவவும். (நடுவில்)
தன்மேனி ஒளி விளங்கவும். தன் உடலில் அணிந்துள்ள பிற  அணிகள்
மின்னிடவும்;சிற்றிடை  நுடங்க  ஒளிர் சீறடி பெயர்ந்தாள் -(அணி
கலங்களின்  பாரத்தால்)  நுண்ணிய  இடை வருந்த. ஒளி மிகும்  தன்
சிறிய பாதங்களை எடுத்து வைத்தாள்.  

அரச  குடும்பத்தினர்  செல்லுங்கால்.  விற்படையும்   வாட்படையும்
ஏந்தி மெய்காவலர் உடன் சூழச் செல்லும் மரபு தோன்ற.   “வில் தவழ.
வாள்  நிமிர. மெய் அணிகள் மின்னச் - சிற்றடி  பெயர்த்தாள்”   எனச்
சீதை  நடந்ததை  நயந்தோன்றக்  கூறினார். வில். வாள். மின்  முதலிய
ஒளி  வெள்ளங்கட்கிடையே   வந்தாள்  என்பதனால். பிராட்டி  உலகச்
சோதியாக விளங்கினாள் எனினுமாம்.                           27