கோலங் காண் படலம் - 1225

bookmark

சீதை நடையின் வருணனை ((1225-1228))

கலிவிருத்தம்
 
1225.    

வல்லியை உயிர்த்த நிலமங்கை. ‘இவள் பாதம்
மெல்லிய உறைக்கும்’ என அஞ்சி. வெளி எங்கும்.
பல்லவ மலர்த் தொகை பரப்பினள் என. தன்
நல் அணி மணிச் சுடர் தவழ்ந்திட. நடந்தாள்.
 
வல்லியை உயிர்த்த நிலமங்கை - பூங்கொடியனைய (மென்மையும்
அழகும்  வாய்ந்த)  சீதையைப்  பெற்ற   மண்மகள்; இவள் மெல்லிய
பாதம்  உறைக்கும்’ என  அஞ்சி  -  இவளுடைய மென்மைவாய்ந்த
திருவடிகள்  (ஒன்றும்  பாவாத  வெறுந்தரையில்   நடந்தால்)   (தரை)
உறுத்தி  வருத்தக்  கூடும்  என்று  நினைத்து அஞ்சியவளாய்;  வெளி
எங்கும்   பல்லவம்.    மலர்த்தொகை    பரப்பினள்    என -
(தன்மகள்  நடந்து   செல்லும்    இடம்    எல்லாம்)   மென்மையான
தளிர்களையும்  மலர்களின்  தொகுதிகளையும்  பரப்பிவைத்தாள் எனக்
கூறுமாறு; தன் நல் அணி மணிச்சுடர் தவழ்ந்திட நடந்தாள் - தான்
அணிந்துள்ள சிறந்த அணிகலன்களில் பதித்துள்ள மாணிக்க மணிகளின்
ஒளிச்சுடர்  (பல  வண்ணங்களில்)   முன்னே  பரவிச்  செல்ல  (சீதை)
நடந்தாள்.    

பிராட்டி     நடந்து செல்லும்போது. பல்வகை மணிகளால்    ஆன
அணிகலன்களின்  ஒளித்தொகுதிகள்  பல நிறச் சுடர்களைத்   தரையில்
உமிழ்ந்தன.    அவ்வாறு   பல்வகை   நிறமுடைய     தளிர்களையும்
மலர்களையும்   தரையில்   பரப்பி   மண்மகன்   வைத்திருந்தமைக்கு
உமித்தார்.  மண்மகள்  பெற்ற மகள் ஆதலால்.  பொருத்தமுற  ‘வல்லி’
(கொடி)  என்று  உருவகித்தார்.  தரையிலே கொடி  தோன்றல்  இயல்பு
ஆதலால்  தற்குறிப்பேற்ற  அணி. சனகன் யாகம்  செய்யப்  பொன்ஏர்
பூட்டி    உழும்போது.    உழுகின்ற    கொழுமுகத்தில்   உதித்திட்ட
பெண்கொடியாதலின்.  ‘வல்லியை  யுயிர்த்த  நில  மங்கை’  (கம்ப.682)
என்றார் எனினுமாம்.                                        24