கோலங் காண் படலம் - 1224
சீதை நடந்து செல்லுதல்
1224.
சிந்தொடு. குறளும். கூனும்.
சிலதியர் குழாமும். தெற்றி
வந்து. அடி வணங்கிச் சுற்ற
மணி அணி விதான நீழல்.
இந்துவின் கொழுந்து விண்மீன்
இனத்தொடும் வருவது என்ன.
நந்தல் இல் விளக்கம் அன்ன
நங்கையும் நடக்கலுற்றாள்.
சிந்தொடு குறளும் கூனும் சிலதியர் குழாமும் தெற்றிவந்து அடி
வணங்கிச் சுற்ற - சிந்தர். குறளர். கூனர். (ஏனைத்) தோழியர்
கூட்டமும் நெருங்கி வந்து பிராட்டியின் திருவடிகளை வணங்கிச்
சூழ்ந்து கொள்ள; மணி அணி விதான நீழல் - மணிகளால் அணி
செய்யப்பட்ட மேற்கட்டியின் நிழலின் கீழே; இந்துவின் கொழுந்து
விண் மீன் இனத்தொடும் வருவது என்ன - இளந்திங்கள் விண் மீன்
கூட்டத்திடையே வருவது போல; நந்தல் இல் விளக்கம் அன்ன -
நந்தா விளக்கனைய; நங்கையும் நடக்கல் உற்றாள் - பெண்களுட்
சிறந்த பிராட்டி நடந்து செல்லத் தொடங்கினாள்.
உடற் குறையுடைய குறளர். சிந்தர். கூனர் முதலோர். அக்காலத்தே
அரண்மனையில் பணிதந்து பராமரிக்கப்பட்டனர் ஆதலின்
அவர்களும் பிராட்டியைப் பணிந்து வாழ்த்தினர் என்க. அவர்களும்
வந்து அடி வணங்கினர் எனக் குறிப்பிடுவதனால் தீனர்கள் மேல்
கவிஞர் பிரான் கொண்டுள்ள பரிவும் பாசமும் புலனாம். இரண்டடி
உயரம் உள்ளோரைக் குறளர் எனவும். மூன்றடி உயரம் உள்ளோரைச்
சிந்தர் எனவும் வழங்கல் மரபு (தொல். செய். பேரா. உரை)
இயல்பாகவே சோதியுடையவள் பிராட்டியாதலின். “நந்தல் இல்
விளக்கே!” என்றார். “நந்தா விளக்கே நாமிசைப்பாவாய்” என்பது மணி
மேகலை. (14:18) “வீறு பஞ்சினின் அமுத நெய் மாட்டிய விளக்கே”
(கம்ப. 2060) என விளிப்பான் இராம பிரானும். 23
