கோலங் காண் படலம் - 1223

bookmark

தோழிமார் சீதையைச் சூழ்தல்

தோழிமார் புடை சூழச்சீதை மன்னர் வீற்றிருந்த மண்டபம்அடைதல்
 
1223.      

பரந்த மேகலையும். கோத்த
   பாத சாலகமும். நாகச்
சிரம் செய் நூபுரமும். வண்டும்.
   சிலம்பொடு சிலம்பி ஆர்ப்ப.
புரந்தரன் கோற்கீழ் ஆனோர்
   அரம்பையர் புடை சூழ்ந்தென்ன.
வரம்பு அறு சும்மைத் தீம் சொல்
   மடந்தையர் தொடர்ந்து சூழ்ந்தார்.
 
பரந்த  மேகலையும்   கோத்த   பாத  சாலகமும்  -  பரவின
மேகலையாகிய   இடையணியும்.  பாத சாலகம் எனும் காலணியும்; நாக
சிரம்  செய்  நூபுரமும் - பாம்பின் தலைவடிவில் முகப்புடைய நூபுரம்
என்னும் காலணியும்;  வண்டும்.  சிலம்பொடு  சிலம்பி  ஆர்ப்ப -
கைவளையல்களும்.    காற்சிலம்பும்   ஒலித்து    ஆரவாரமுண்டாக்க;
புரந்தரன் கோல் கீழ் ஆனோர் அரம்பையர் புடை சூழ்ந்து என்ன
- இந்திரன்  ஆட்சிக்குட்பட்ட  அரம்பை  முதலிய  தேவப்  பெண்கள்
பக்கங்களில் சூழ்ந்துவந்தாற் போல; வரம்பு அறு சும்மைத் தீம் சொல்
மடந்தையர்  மருங்கு  சூழ்ந்தார்  -  அளவு கடந்தவர்களாய். இனிய
ஒலிக் குதலைச் சொல்லினராய். தோழிப் பெண்கள்  பலர்.  பிராட்டியின்
மருங்கே இடையீடின்றிச் சூழ்ந்து சென்றனர்.  

பாத  சாலகம்.  நூபுரம். சிலம்பு - கால் அணி இனங்கள்.  வண்டு -
கைவளை.     அணிகளின்      இன்னொலியும்.      அணியிழையார்
இன்னொலியும்  சூழப்  பிராட்டி  சென்றாள்  என்றவாறு.  சிலம்புதல் -
ஒலித்தல்.   சிலம்பு   -  ஒலித்தல்  காரணமாக   வந்தபெயர்.  இங்கு.
சிலம்பின்   பெயர்க்   காரணம்  அறிவிப்பார்  போல.   “சிலம்பொடு
சிலம்பி”  என்றார்.  “சீறடிய  கிண்கிணி  சிலம்பொடு  சிலம்ப”  (சீவக.
2019)  என்பார்  திருத்தக்க   தேவரும்.  சும்மை  -  ஒலி.   சிலம்பும்
நூபுரமும்  தனித்  தனிக்  காலணிகள்  என்பது.   “நூபுரம்  புலம்பிடச்
சிலம்பு  நொந்தழ” (கம்ப. 9931) எனும்  இடத்தால்  உணரலாம். நூபுரம்
- பாத தண்டை எனக் கொள்ளலாம்.                           22