கோலங் காண் படலம் - 1221

bookmark

1221.    

இழை குலாம் முலையினாளை.
   இடை உவா மதியின் நோக்கி.
மழை குலாவு ஓதி நல்லார்.
   களி மயக்குற்று நின்றார்-
உழை குலாம் நயனத்தார்மாட்டு.
   ஒன்று ஒன்றே விரும்பற்கு ஒத்த
அழகு எலாம் ஒருங்கே கண்டால்.
   யாவரே ஆற்றவல்லார்?
 
மழை  குலாவு  ஓதிநல்லார்  -  கார்  மேகம்    போன்ற  கரிய
கூந்தலையுடைய  சீதையின்  தோழியர்; இழைகுலாம்  முலையினாளை
இடை  உவா  மதியின்  நோக்கி  -  அணிகலன்கள்  விளங்குகின்ற
தனங்களையுடைய  பிராட்டியை  முழு  மதியைப்   பார்ப்பது  போலப்
பார்த்து;  களிமயக்  குற்று  நின்றார்  -  களிப்பினால்  மயக்கமுற்று
நின்றனர்;  உழை  குலாம்   நயனத்தினார்மாட்டு   ஒன்றொன்றே
விரும்பற்கு   ஒத்த    -   (உலகில்   உள்ள)   மான்விழி   பெற்ற
மங்கையரிடத்தே  ஒவ்வோர் உறுப்பே  ஒவ்வொருவருக்கு  விரும்புவதற்
கேற்ற  அழகுடையதாயிருக்கும்; அழகு  எலாம்  ஒருங்கே கண்டால்
யாவரே   ஆற்ற    வல்லார்   -   (உலகில்   உள்ள)   அழகுகள்
எல்லாவற்றையும் ஓரிடத்திலே காண நேர்ந்தால். யார்தாம்  (உள்ளம்பறி
கொடுக்காமல்) தாங்க வல்லவர்கள்?  

உலகத்து  மங்கையர் எல்லோரையும் எல்லோரும் விரும்பாமைக்கும்.
பிராட்டியை எல்லோரும்  விரும்புதற்கும்  காரணம் கூறியவாறு. பிராட்டி
அழகின்  குவியல்.  சர்வாங்க  சுந்தரி  என்றவாறு. ஒவ்வோர் உறுப்பே
அழகுடைய   மங்கையரே.    ஆடவரின்   இத்தனை   மோகத்துக்குக்
காரணம்  ஆவர்  என்றால். அனைத்துறுப்புகளும்  அழகு  கொழிக்கும்
சீதையின்மேல்  உலகினர்   பெருவிருப்பங்   கொள்ளுதல்  வியப்பன்று
என்றவாறு.   சீதை.   எல்லா  உறுப்பாலும்   அழகியள்   என்பதனை.
“பெண்கள்  ஆனார்க்குள்  நல்ல   உறுப்பெல்லாம்  பெருக்கி   ஈட்டி”
(கம்ப.    7638)    என     இராவணன்.    வாயாலும்    உரைப்பார்.
“இருதிறத்தார்க்கும்  செய்த  வரம்பு   இவர்  இருவர்”   (கம்ப.  2792)
எனவும்.  “  தெரிவை மார்க்கு ஒரு  கட்டளையெனச்  செய்த திருவே”
(கம்ப. 2078) எனவும் வருவன காண்க.                          20