கோலங் காண் படலம் - 1220

bookmark

சீதையின் அழகைக் கண்டு மகளிரும் காமுறுதல்
(1220-1221)

சீதையின் அழகில் மங்கையர் மயங்கல்
 
1220.    

கஞ்சத்துக் களிக்கும் இன் தேன்
   கவர்ந்து உணும் வண்டு போல.
அம் சொற்கள் கிள்ளைக்கு எல்லாம்
   அருளினாள் அழகை மாந்தி.
தம் சொற்கள் குழறி. தம்தம்
   தகை தடுமாறி நின்றார்-
மஞ்சர்க்கும். மாதரார்க்கும்.
   மனம் என்பது ஒன்றே அன்றோ?*
 
கஞ்சத்துக் களிக்கும் இன்தேன் களித்து உணும் வண்டு  போல
- தாமரை மலரிலிருந்து களிப்பையுண்டாக்கும் தேனைக் கவர்ந்து உண்டு
(மகிழும்) வண்டுகளைப்போல;  அம் சொற்கள் கிள்ளைக்கு எல்லாம்
அருளினாள்  அழகை  மாந்தி  - (சீதைக்கு அணி செய்த மாதர்கள்)
அழகிய      சொற்களைக்     கிளிகளுக்கெல்லாம்     கற்பித்தருளிய
அப்பிராட்டியினது  அழகைப்  பருகி;  தம் சொற்கள் குழறித் தம்தம்
தகை  தடுமாறி   நின்றார்   -  (அந்த  அழகு  எனும்  மது  தந்த
மயக்கத்தால்)   தங்களுடைய   சொற்கள்  (இயல்பான)  நிலையிலிருந்து
குழறவும்.   தங்கள்   தங்களது   இயற்கையான   (நாணம்   முதலிய)
பெண்மையின்  குணங்கள்  மாறு  படவும்  நின்றார்கள்;  மஞ்சர்க்கும்
மாதரார்க்கும்    மனம்    என்பது    ஒன்றே    அன்றோ!  -
(இம் மண்ணுலகில்) ஆடவர்களுக்கும். மகளிர்க்கும் (வடிவு வேறுபடினும்)
மனம் என்பது ஒருதன்மையதே அன்றோ!   

மது   ஆணுக்கும்  பெண்ணுக்கும்  ஒரு   தன்மைத்தாகவே  நிலை
வேறுபாட்டை  விளைவிக்கும்; சீதையின்  அழகும் மதுவும்  ஆண்கட்கு
உண்டாக்கும்  அதே  நிலையினை  மகளிர்க்கும் உண்டாக்கிற்று  எனக்
கூறி. சீதையின் அழகின்  பேரெல்லையையும்.  மதுவின்  வெறியினையும்
ஒருங்கே  விளக்கியவாறு.  வேற்றுப்  பொருள்  வைப்பணி.  “கண்களிற்
காணவே  களிப்பு  நல்கலால் மங்கையர்க்கு இனியதோர்  மருந்துமாய்”
(கம்ப. 512) என்றார்  முன்னும்.  “ஆண்  விருப்புற்று        நின்றார்
அவ்வளைத்             தோளினாரே”              (சீவக.  2447)
என்பார்தேவரும். மஞ்சர் -  மைந்தர்;  போலி.  கிளியின்  மொழிகளில்
உள்ள இனிமை இந்தக் கிளி அங்கே  கிளிகட்கும்    கொடுத்த  பிச்சை
என்பார். “அஞ் சொற்கள  கிள்ளைக்கெல்லாம்  அருளினாள்” என்றார்.

காவியம்  நெடுகிலும் உளநூற் கருத்துக்களை. இயலும்  இடமெல்லாம்
தெளித்துச்  செல்வது  கவிஞர்  பிரானின்   சிறப்புக்களுள்  ஒன்றாகும்.
ஆணுக்கும்   பெண்ணுக்கும்   உடல்   வேறுபாடு   உண்டே   தவிர.
மனச்சிந்தனைகளில்  வேறுபாடு  இல்லை என்கிறார்   இங்கு.  உயிர்கள்
அழகால்  ஈர்க்கப்படுதல்  ஆண்  பெண் வேறுபாடின்றி  நிகழும்  ஒரு
பொது  இயல்பு  ஆகும்  என்பார்.  மஞ்சர்க்கும்  மாதரார்க்கும்  மனம்
என்பது  ஒன்று  என்பது.  சீதையின்  அழகை   மாந்தித்    தோழியர்
தம்தகை  தடுமாறி  நின்றதால்  தெளிவாம்  என்கிறார்.   பிராட்டியைக்
கண்ட  சூர்ப்பனகை.  “கண்பிற   பொருளில்   செல்லா;  கருத்தெனின்
அஃதே;  கண்ட பெண் பிறந்தேனுக்கு என்றால்  என்படும்  பிறருக்கு?”
(கம்ப. 2781) என்பாள். இராமனைக்  கோசிகர்.  “ஆடவர்  பெண்மையை
அவாவும்  தோளினாய்! “(கம்ப. 362)  என்பதும்  காண்க.  “பெண்டிரும்
ஆண்மை  வெஃகிப்  பேதுறும்  முலையினாள்”  (சீவக. 587) என்பார்
தேவரும்.  “ராகவா  உன்  வடிவு  கண்டால்   மன்மதனும்  மடவாராக
ஆதரஞ் செய்வன்” (திருவரங்கத் 60) என்பார் திவ்வியகவியும்.  

“அஞ்சொற்கள்     கிள்ளைக்கெல்லாம் அருளினாள்”  என்பதனால்.
சீதையின்   சொற்கள்   கிளிமொழியினும்   பலமடங்கு    இனிமையில்
உயர்ந்தவை என்றவாறாம். “தண்டமிழ் யாழினும் இனிய   சொற்கிளியே”
(கம்ப. 2073) என இராமனும் விளிப்பான்.                        19