கோலங் காண் படலம் - 1214

bookmark

மேகலையும் தாரகைச் சும்மையும் அணிதல்

1214.    

நிறம் செய் கோசிக நுண் தூசு
   நீவி நீவாத அல்குல்-
புறம் செய் மேகலையின் தாழத்
   தாரகைச் சும்மை பூட்டி.
திறம் செய் காசு ஈன்ற சோதி
   பேதை சேயொளியின் சேந்து
கறங்குபு திரிய. தாமும்
   கண் வழுக்குற்று நின்றார்.
 
நிறம் செய் கோசிக நுண்தூசு நீவி நீவாத அல்குல் - வண்ணம்
பொருந்திய  பட்டாகிய  மிக  மெல்லிய   ஆடையின்   கொய்சகத்தை
நீங்காத இடைக்கு; புறம்செய் மேகலையின் தாழத் தாரகைச் சும்மை
பூட்டி   -   வெளியே    (அழகு)   செய்கின்ற   மேகலை  என்னும்
அணியையும். அதன் கீழ்ப்பட. தாரகைச்  சும்மை  என்னும்  மணிவடத்
தொகுதியையும் (தோழியர்) அணிவித்து; திறம்செய்காசு ஈன்ற சோதி-
(அந்த  அணிகலன்களிலிருந்து)   எழுகின்ற  பல்வகைப்பட்ட  மணிகள்
வெளிவிட்ட   ஒளி  வெள்ளம்;  பேதை  சேய்  ஒளியின் சேந்து -
சீதையினது சிவந்த உடல் ஒளியோடு சேர்ந்து சிவந்து; கறங்குபு திரிய.
தாமும் கண் வழுக்குற்று நின்றார் - சுற்றிச்  சுழன்று உலாவ (அணி
செய்து   கொண்டிருந்த   தோழியர்)   தாமும்   (கலப்பு    ஒளியின்
மிகுதியினால்) கண் கூச்சமுற்று நின்றார்கள்.   

தாரகைச்  சும்மை - நட்சத்திரங்களின் கூட்டம் போல் வடிவமைந்து
முத்துக்களால்  ஆகிய  ஓர்  இடையணி. அணிவிப்பாரையே  ஒளியால்
அயரவைக்கும்    ஆபரணங்கள்  என்றவாறு.  “கதிர்  முத்தம்  இடம்
தொறும்  கிடந்து  இமைப்பன  எக்கு  இளஞ்  செக்கர் படர்ந்த  வான்
இடைத்  தாரகை  நிகர்ப்பன  பாராய்” (கம்ப. 2072) எனும்   இடத்தில்
முத்துக்களுக்கு.   தாரகைகளை   உவமித்துள்ளது     காண்க.  நீவி -
கொய்சகம்.  கோசிகம் - பட்டு. “கோசிகத் துகில் உற்ற  கொழுங்கனல்”
(கம்ப.  5967)  என்பார் மேலும் கண் கூசுதலைக் “கண்  வழுக்குறுதல்”
என்பது அரிய சொற் பிரயோகம்.                             13