கோலங் காண் படலம் - 1213

bookmark

தொய்யில் எழுதல்

1213.

சில் இயல் ஓதி கொங்கைத்
   திரள் மணிக் கனகச் செப்பில்.
வல்லியும் அனங்கன் வில்லும்
   மான்மதச் சாந்தின் தீட்டி.
பல் இயல் நெறியின் பார்க்கும்
   பரம் பொருள் என்ன. யார்க்கும்.
‘இல்லை.’ ‘உண்டு’. என்ன நின்ற
   இடையினுக்கு இடுக்கண் செய்தார்.
 
சில் இயல் ஓதி கொங்கைத் திரள் மணிக் கனகச் செப்பில் -
சில வகைகளாக வகுத்து அலங்கரிக்கப்படும் கூந்தலையுடைய சீதையின்
தனங்களாகிய   திரண்ட  மணி   பதிக்கப்பட்ட  பொற்செப்புக்களில்; 
வல்லியும்  அனங்கன்  வில்லும்  மான் மதச்  சாந்தின்  தீட்டி -
பூங்கொடிகளையும். மன்மதனது  வில்லாகிய  கரும்புகளையும்  கத்தூரி.
சந்தனக்   குழம்புகளால்  (ஓவியமாக)  எழுதி;  பல்இயல்  நெறியில்
பார்க்கும் பரம்பொருள்  என்ன - பலவகையான (சமய) நெறிகளால்
பலவாறாகப்   (உண்டு.   இல்லை   யென்று)   பார்க்கப்படுகிற  பரம்
பொருளாகிய  கடவுளின்  வடிவத்தினைப் போல; யார்க்கும் இல்லை.
உண்டு என்ன நின்ற இடையினுக்கு இடுக்கண் செய்தார்- உண்டோ
இல்லையோ   என்று   யாவர்க்கும்   ஐயம்  உண்டாம்  படியிருக்கிற
(சீதையின்)    மெல்லிய    இடைக்கு    (ஓவியம்   எழுதி)   மேலும்
வருத்தத்தைத் (தோழியர்) விளைவித்தனர்.   

உண்டோ  இல்லையோ  என்று  இடை  ஐயப்படுமாறு கூறப்படினும்
இடையென்று  என்று  இருப்பது  யாவர்க்கும்  ஐயத்திற்   கிடமில்லாத்
துணி   பொருள்     ஆதல்போல.   இல்லையோ.   உண்டோ  எனப்
பல்வகையால் ஐயுறப்படும்  பரம்பொருளும்  ஐயத்திற்கிடமில்லாத் துணி
பொருளாய்   உள்    பொருளே   என  உவமையால்  பெற  வைத்த
அருமையினை   ஓர்ந்துணர்க.  “அன்றே  என்னின்  அன்றே  ஆமே.
ஆம்   என்னின்   ஆமே  யாம்”  (கம்ப.  6059)  என்று   உரைத்து.
அன்றெனவும் ஆம் எனவும்  கூறப்பட ஆம் ஒருபொருள் உண்டு  என
மேலும்  உரைப்பார்.  “தொட்ட  எற்கு உணரலாம் மற்று  உண்டெனும்
சொல்லும் இல்லை” (கம்ப. 4484) என்பான் இராமபிரான்.  “கண்கொளா
நுடங்கு  இடையை  உண்டெனத்  தமர்  மதிப்பர்; நோக்கினார்  பிறர்
எல்லோரும்  உண்டு  இல்லையென  ஐயம்  அல்லது  ஒன்று உணர்வு
அரிதே” (சீவக. 172)12