கோலங் காண் படலம் - 1209
முத்துமாலை அணிதல்
1209.
கோண் இலா வான மீன்கள்
இயைவன கோத்தது என்கோ?
வாள் நிலா வயங்கு செவ்வி
வளர் பிறை வகிர்ந்தது என்கோ?
நாணில் ஆம் நகையில் நின்ற
நளிர் நிலாத் தவழ்ந்தது என்கோ?-
பூண் நிலாம் முலைமேல் ஆர
முத்தை - யான் புகல்வது என்னோ?
பூண்நிலாம் முலைமேல் ஆரமுத்தை - ஆபரணங்கள் உலாவும்
சீதையின் தனங்களின் மேல் உள்ள முத்துமாலையை; கோண் இலா
வானமீன்கள் இயைவன கோத்தது என்கோ? - கோணுதல் இன்றித்
தத்தமக்குரிய வானப்பாதைகளில் உலாவும் விண்மீன்களில்
பொருந்துவனவற்றை எடுத்துக் கோத்தது (இது) என்பேனோ?;
வாள்நிலா வயங்கு செவ்வி வளர்பிறை வகிர்ந்தது என்கோ - ஒளி
நிலவும் அழகுத்தோற்றமுடைய வளர்பிறைச் சந்திரனைத் துண்டாக்கிச்
செய்யப்பட்டது (இது) என்பேனோ?; நாணில் ஆம் நகையில் நின்ற
நளிர் நிலாத் தவழ்ந்தது என்கோ? - பலரும் நிறைந்த சபையில்
இராமனைக் காண (பிராட்டி) நுழைய வேண்டியிருப்பதனால்.
அவள் முகத்தில் எழுந்த நாணம் கலந்த புன்னகையில் பொருந்திய
செறிந்த வெளிச்சம் தவழ்ந்த கோலம் (இது) என்பேனோ?;
யான் புகல்வது என்? - நான் என்ன வென்று வண்ணிப்பேன்?
முத்து வெண்மை நிறத்தது ஆதலின். உயர்வெண்மை
நிறத்தவற்றையெல்லாம் உவமித்தார். மூன்றாம் அடியின் வர்ணனை
உயர் கவிகளுக்கே உரிய ஒன்று. அவையோரைக்காண இருப்பதால்
வெட்கமும். இராமனைக்காண இருப்பதால் புன்னகை தவழும்
முகத்தை மனக்கண்ணால் காணவைக்கிறார். குனிந்து நிற்கும் அவள்
புன்னகை வெளிச்சம் அவள் மார்பின்மேல் முத்து மாலையாகிக்
கிடந்தது என்க. விண்மீன்கள் யாவும் ஒரு தன்மையன அல்ல
ஆதலின். “வான்மீன்கள் இயைவன கோத்த என்கோ?” என்றார்.
என்கோ - என்பேனோ? - தன்மை ஒருமை வினைமுற்று வினாவில்
வந்தது. நான்கு ஓகாரங்களும் கவிஞர் பிரானின் தவிப்பை
யுணர்த்தின. 8
