கோலங் காண் படலம் - 1204

bookmark

சீதையைத் தாதியர் அணிசெய்தல்

தாதியர் சீதைக்கு அழகு செய்தல்
 
1204.

அமிழ் இமைத் துணைகள். கண்ணுக்கு
   அணி என அமைக்குமாபோல்.
உமிழ் சுடர்க் கலன்கள். நங்கை
   உருவினை மறைப்பது ஓரார்.
அமிழ்தினைச் சுவை செய்தென்ன.
   அழகினுக்கு அழகு செய்தார்-
இமிழ் திரைப் பரவை ஞாலம்
   ஏழைமை உடைத்து மாதோ!
 
அமிழ்  இமைத்துணைகள்  கண்ணுக்கு அணி  என அமைக்கு
மாபோல் -  (கண்கள்) மறைதற்குக் காரணமான இரண்டு  இமைகளும்
அக்கண்களுக்கு  அழகென்று  (இறைவனால்)   அமைக்கப்பட்டிருப்பது
போல;  உமிழ்  சுடர்க் கலன்கண் நங்கை  உருவினை மறைப்பது
ஓரார் -  (சீதைக்கு  அணிசெய்யும்  மகளிர்) ஒளிவீசும் ஆபரணங்கள்
சீதையின் (அழகிய)  வடிவத்தை   மறைக்கும் என்னும்   உண்மையை
உணராதவர்களாய்;  அமிழ்தினைச்     சுவை   செய்தென்ன   -
(இயல்பாகவே)     (அத்துணைச்     சுவைகளையும்    பெற்றிருக்கிற)
அமிழ்துக்கு. (கற்கண்டு சர்க்கரை முதலியவை  கொண்டு) மேலும் சுவை
கூட்டும்   முயற்சியைப்   போல; அழகினுக்கு  அழகு  செய்தார் -
(இயற்கையிலேயே)  பேர்  அழகுவாய்ந்த  (சீதையின்  உறுப்புகளுக்கு)
(மேலும்  புதிதாக)  அழகு  செய்யத் தொடங்கினார்கள்; இமிழ்திரைப்
பரவை ஞாலம் ஏழைமை உடைத்து - அலை ஒலிக்கும் கடல்சூழ்ந்த
இந்நிலவுலகத்து  மக்கள் (நன்மை புரிவதாக  நினைத்துப் பிழைபுரியும்)
அறியாமையுடையவர்கள்.   

மாது.  ஓ - அசைகள். நினைக்கும் நினைவு நல்லதாயினும். அதற்கு
மாறான   செயல்   புரியத்   தொடங்குதல்   பேதைமை.   சீதைக்கு
அணிசெய்யக்    கருதுதலின்    மேல்    வைத்து    அப்பண்பினை
விளக்கியவாறு. பிறமகளிர் அணி தரித்து அழகு செய்வர்.  சீதை அணி
பறித்து  அழகு  செய்வாள்  என  (கம்ப  :  6991)  அவள்  அழகின்
பெருமை  அறிவித்தவாறு.  “அணிகலம் அணிவோர் அணியிலோரே....
இவள்போல்   உறுப்பே  அணிகலமாக  உடையோர்”  (பெருங். 4:17)
ஏழைமை.  அறியாமை  குறித்து  நின்றது.  “செய்யாக்  கோல மோடு
வந்தீர்”   (சிலப்   16:11)   எனக்   கண்ணகியின்  அணியா  அழகு
புகழப்படும்.                                              3