கோலங் காண் படலம் - 1202
வசிட்டன் சீதையை அழைத்துவரச் சொல்லுதல்
1202.
தேவியர் மருங்கு சூழ.
இந்திரன் இருக்கை சேர்ந்த
ஓவியம் உயிர் பெற்றென்ன
உவந்து. அரசு இருந்தகாலை.
தா இல் வெண் கவிகைச் செங்கோல்
சனகனை இனிது நோக்கி.
‘மா இயல் நோக்கினாளைக்
கொணர்க!’ என. வசிட்டன் சொன்னான்.
ஓவியம் உயிர்பெற்று என்ன - சித்திர வடிவங்கள் உயிர்பெற்று
இயங்குவது போன்ற; தேவியர் மருங்கு சூழ - தம் மனைவியர்கள்
தன் அருகே சூழ்ந்திருக்க; இருக்கை சேர்ந்த இந்திரன் - (என்ன)
அரசு உவந்து இருந்த காலை - ஆசனத்தில் அமர்ந்துள்ள
தேவேந்திரன் என்னுமாறு தசரத வேந்தன் (அம்மணி மண்டபத்துச்
சிங்காதனத்தில்) மகிழ்ச்சிபொங்க வீற்றிருக்கும் போது; வசிட்டன் தா
இல்வெண்கவிகைச்செங்கோல் சனகனை இனிது நோக்கி - (அவன்
குலகுருவாகிய) வசிட்ட மாமுனி. குற்றமற்ற வெண்கொற்றக் குடையும்.
செங்கோலும் தாங்கும் சனக மன்னனை இனிமையுடன் பார்த்து;
மாஇயல் நோக்கினாளைக் கொணர்க எனச்சொன்னான் - ‘மான்விழி
போன்ற கண்ணாள் ஆகிய சீதையை அழைத்து வருக’ என்று
கூறியருளினான்.
முன்பும் (கம்ப. 316. 318) தசரதவேந்தனுக்கு இந்திரனை
உவமிப்பார். ஓவியத்திற்குத் தயரதன் மனைவியர் அழகு வடிவமும்.
அவர்கள் இயக்கத்திற்கு ஓவியம் உயிர் பெறுதலும் உவமையாம்.
இல்பொருள் உவமை. தயரதனோடு தயரதன் தேவியர் பலரும் உடன்
வந்தனர் என்பதனை. “நெறியிடைப்படர வேந்தன் நேயமங்கையர்
தாம் செல்வார்” (கம். 793) என எழுச்சிப் படலத்தும் உரைத்தார்.
“மாவியல் நோக்கினாள்” என்பதற்கு. மாவடு போன்றவிழியினாள்;
பெரிய அகன்ற விழியினாள் எனவுமாம். குலகுரு முன்னர். தசரதன்
ஓவியர் உயிர்பெற்றது போல் அடங்கியிருந்தனன் என இரண்டாம்
அடிக்குப் பொருள் கூறுப. 1
