கைலாசம் பாலசந்தர்
வாழ்க்கை வரலாறு
தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். கே. பாலசந்தர் எனப் பொதுவாக அழைக்கப்படும் இவர் மேடை நாடகத் துறையில் இருந்து திரைத்துறைக்கு வந்தவர். திரைத்துறையில் 1965ம் ஆண்டு வெளியான நீர்க்குமிழி இவரது முதல் இயக்கமாகும். நாகேஷ் இதில் கதாநாயகனாக நடித்தார். இவருடைய பெரும்பாலான படங்களில், மனித உறவு முறைகளுக்கு இடையிலான சிக்கல்கள், சமூகப் பிரச்சினைகள் ஆகியவையே கருப்பொருளாய் விளங்கின. அபூர்வ ராகங்கள், புன்னகை மன்னன், எதிர் நீச்சல், வறுமையின் நிறம் சிகப்பு, உன்னால் முடியும் தம்பி முதலியன இவர் இயக்கிய சிறந்த படங்களில் சிலவாகும். தமிழ்த் திரையுலகின் முக்கிய நடிகர்களான கமல் ஹாசன் மற்றும் ரஜினி காந்தை அறிமுகம் செய்தவர்.
தமது இயக்கத்தில் பாலச்சந்தர் அதிகமாகப் பயன்படுத்திய நடிகர்கள் ஜெமினி கணேசன், நாகேஷ், மேஜர் சுந்தரராஜன், கமலஹாசன் முத்துராமன் ஆகியோர். நாகேஷ் இவருக்கு மிக விருப்பமான நடிகர்களில் ஒருவராக இருந்தவர். நடிகையரில் சௌகார் ஜானகி, ஜெயந்தி, சுஜாதா, சரிதா ஆகியோரைக் குறிப்பிடலாம்.
ஶ்ரீதரைப் போல, பாலச்சந்தரும், தமது துவக்க மற்றும் இடைக்காலப் படங்களில் ஜெமினி கணேசனை வெகுவாகப் பயன்படுத்தியிருந்தார். தாமரை நெஞ்சம், இரு கோடுகள், கண்ணா நலமா, புன்னகை, வெள்ளி விழா, நூற்றுக்கு நூறு ஆகியவை அவற்றில் அடங்கும்.
இயக்குனர் ஶ்ரீதர் பல விடயங்களிலும் தமது முன்னோடி என அவர் உரைத்தது மட்டும் அன்றி, தமக்குப் பின்னர் வந்த பாரதிராஜா, மணிரத்னம் போன்றோரையும் அவர் பல நேரங்களில் பாராட்டியுள்ளார். பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் திரைப்படத்தின் வெற்றி விழாவில் அவரது பாராட்டுப் பேச்சு ஒரு படைப்பாளியாக உணர்ச்சி வசப்படும் அவரது தன்மையை வெளிப்படுத்திப் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
1970ஆம் ஆண்டுகளின் துவக்கத்தில் அவர் இயக்கிய அரங்கேற்றம் என்னும் திரைப்படம், அதன் கருத்துக்காகவும், கையாளுமைக்காகவும், அது வெளியான காலகட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
