கையடைப் படலம் - 336

bookmark

இராமன் படைக்கலம் தாங்குதல்

336.

வென்றி வாள் புடை விசித்து. மெய்ம்மைபோல
என்றும் தேய்வுறாத் தூணி யாத்து. இரு
குன்றம் போன்று உயர் தோளில். கொற்ற வில்
ஒன்று தாங்கினான் - உலகம் தாங்கினான்
 
உலகம்   தாங்கினான் -  காக்கும் கடவுளின் அம்சமான ராமன்;
வென்றி  வாள்  புடை  விசித்து  -  வெற்றியை  உடைய  வாளை
இடையிலே  கட்டிக் கொண்டு; மெய்ம்மை போல் - என்றும் அழியாத
உண்மை  போன்ற; என்றும் தேய்வு உறா தூணி யாத்து - அம்புகள்
என்றும்   தேயாத   அம்பறாத்தூணியைத்  தோளில்  கட்டி;  குன்றம்
போன்று  உயர்  தோளில் -இரண்டு மலைகளைப் போன்று உயர்ந்த
(மற்றொரு)   தோளில்; கொற்றவில்  ஒன்று  தாங்கினான் - வெற்றி
மிகுந்த வில் ஒன்றினையும் சுமந்தான்.

வென்றி:   வெற்றி.  வெல்:  பகுதி.  விசித்தல்: கட்டல். சிசி: பகுதி.
புடை:       பக்கம்.       தூணியில்       அம்புகள்     என்றும்
அறாத்தன்மையுடைமையால்  ‘’மெய்ம்மை  போல் என்றும் தேய்வுறாத்
தூணி’’  என்றார்.  இரு  குன்றம்:  பெரிய  மலை எனலுமாம். உலகம்
தாங்கும்  உறுதி  தோள்களுக்கு  உண்மை  பற்றி உலகம் தாங்கினான்
என்றார். உலகம் தாங்கினான் - விசித்து -  யாத்து - வில் தாங்கினான்
என்க.                                                   20