கையடைப் படலம் - 334
இராம லக்குமணரைத் தசரதன்
விசுவாமித்திரனிடம் ஒப்படைத்தல்
334.
வந்த நம்பியைத் தம்பிதன்னொடும்
முந்தை நான்மறை முனிக்குக் காட்டி. ‘நல்
தந்தை நீ. தனித் தாயும் நீ. இவர்க்கு.
எந்தை! தந்தனென்; இயைந்த செய்க!’ என்றான்.
வந்த நம்பியை - அவ்வாறு அருகு வந்து சேர்ந்த நம்பியாகிய
இராமனை; தம்பி தன்னொடும் - ராமனை விட்டு நீங்காத தம்பியான
இலக்குவனோடும்; முந்தைய நான்மறை முனிக்குக் காட்டி - பழைய
வேதங்களை அறிந்தநல் முனிவனாகிய விசுவாமித்திரனுக்குக் காட்டி;
நல்தந்தை நீ தனித்தாயும் நீ இவர்க்கு -இந்த குமாரர்களுக்கு இனித்
தாயும் தந்தையும் நீங்களே தாம்; எந்தை தந்தனன்-எந்தையே!
இவர்களைத் தங்களிடம் கொடுத்தேன்; இயைந்த செய்க என்றான் -
இவர்களைக் கொண்டு இயைந்தபடி காரியங்களைச் செய்வீராக
என்றான்.
நம்பி: பெருமை உடையவன் (இராமன்). ‘தம்பி’ எனப் பொதுப்படக்
கூறினும் இலக்குவனையே குறிக்கும். காட்டுதல்: சுட்டிக் காட்டுதல்.
எந்தை: எந்தையே என்னும் விளி. இயைந்து: உமக்கு இயைந்த
அல்லது அவர்கட் கியைந்த எனவும் பொருள் கொள்ளலாம். செய்க:
வியங்கோள். இராம. இலக்குவர்களை முனிவரிடம் ஒப்படைத்தல்
கூறப்பட்டது.. நம்பியை- தம்பியோடு - காட்டி - தந்தனன் - இயைந்த
செய்க என்பது பொருள் முடிபாகும். 18
