கையடைப் படலம் - 332
332.
‘பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் போய்
மொய் கொள் வேலைவாய் முடுகும் ஆறுபோல்.
ஐய! நின் மகற்கு அளவு இல் விஞ்சை வந்து
எய்து காலம் இன்று எதிர்ந்தது’ என்னவே.
ஐய - தசரத மன்னனே; பெய்யும் மாரியால் பெருகு வெள்ளம் -
பெய்கின்ற மழையினாலே பெருகுகின்ற நீர்ப்பெருகு; போய்.
மொய்கொள் வேலைவாய் - சென்று. நிர்ச் செறிவுமிக்க கடலிடத்தே;
முடுகும் ஆறுபோல் -விரைந்து சேரும் தன்மை போல்; நின் மகற்கு
- உனது புத்திரனான ராமபிரானுக்கு; அளவில் விஞ்சை -
அளத்தற்கரிய வித்தைகள் பலவும்; வந்து எய்து காலம் -வந்து
அடையும் காலம்; இன்று எதிர்ந்தது என்னவே - இன்று
கூடியிருக்கிறது என்று வசிட்ட முனிவன் சொல்லவும்.
இது குளகம். அடுத்த பாட்டுடன் பொருள் முடியும். பெருகு
வெள்ளம். பெருகிய வெள்ளம் (வினைத்தொகை). போய்: நகர்ந்து
சென்று. மொய்: செறிவு (வலிமை). முடுகுதல்: விரைந்து செல்லுதல்.
ஆறு: தன்மை. (ஆறுமாம்). கடலில் சென்று கலக்கும் வெள்ளம்
அளவிடற்கரியது. அதுபோல இராமனை
அடையும் வித்தைகளும் அளவிடற்கரியனவாம். முந்திய பாடலில்
‘உறுதி எய்தும் நாள்’ என்று கூறியதற்கேற்ப. இங்கு ‘ விஞ்சை
வந்தெய்து காலம்’ என்றார். 16
