கையடைப் படலம் - 331
வசிட்ட முனிவன் தசரதனுக்கு உறுதிகூறுதல் (331-332)
331.
கறுத்த மா முனி கருத்தை உன்னி. ‘நீ
பொறுத்தி’ என்று அவற் புகன்று. ‘நின் மகற்கு
உறுத்தல் ஆகலா உறுதி எய்தும் நாள்
மறுத்தியோ?’ எனா. வசிட்டன் கூறினான்.
கறுத்த மாமுனி - சீற்றம் கொண்டெழுந்த விசுவாமித்திர
முனிவனது; கருத்தை உன்னி - உள்ளக் கருத்தை நினைத்துத்
தேர்ந்து (அவனை நோக்கி); நீ பொறுத்தி என்று அவன்புகன்று -
நீ பொறத்தருள்வாயாக என அவனுக்குச் சொல்லிவிட்டு (பிறகு
மன்னனைப் பார்த்து); நின் மகற்கு - உனது மகனாகிய ராமபிரானுக்கு;
உறுத்தல் ஆகலா உறுதி - அடைவித்தற்கு அரிய நன்மைகளெல்லாம்;
எய்தும் நாள் மறுத்தியோ - வந்து கூடும் நாளை வேண்டாமென
மறுத்துக் கூறுவாயோ; எனா வசிட்டன் கூறினான் - என்று வசிட்ட
முனிவன் கூறலானான்.
கறுத்தல்: சினத்தல். உன்னி: நினைத்து. பொறுத்தி: பொறுப்பாயாக.
மரியாதை உணர்த்திற்று. உறுத்தல். அடையச் செய்தல் (பிறவினை)
உறுதி: நன்மை. மறுத்தியோ: மறுத்துரைப்பாயோ (அதிகாரத்தை
உணர்த்திற்று). ஆக+அலா: ஆகலா: ஆகமாட்டாது.
சினம் கொண்டெழுந்த விசுவாமித்திரனைப் ‘பொறுத்தி’ எனக் கூறி
அமைதியுறச் செய்தபின். மன்னனை நோக்கி. ‘உன் மகனுக்கு.
‘உறுத்தலாகலா உறுதி’ எய்தும் நாள் இது. இதை மறுத்தியோ’ என
வசிட்டன் கூறினான் என்பது கருத்து. 15
