கையடைப் படலம் - 329
தசரதன் யானேகாப்பேன் , வேள்விக்கு எழுக எனல்
329.
தொடை ஊற்றின் தேன் துளிக்கும் நறுந் தாரான்
ஒருவண்ணம் துயரம் நீங்கி.
‘படையூற்றம் இலன். சிறியன் இவன்; பெரியோய்!
பணி இதுவேல். பனி நீர்க் கங்கை
புடை ஊற்றும் சடையானும். புரந்தரனும்
நான்முகனும். புகுந்து செய்யும்
இடையூற்றுக்கு இடையூறாய். யான் காப்பென்;
பெரு வேள்விக்கு எழுக!’ என்றான்.
தொடை ஊற்றின் தேன் துளிக்கும் - தொடையின் ஊற்றுப்
போலத் தேன் துளிக்கின்ற; நறுந்தாரான் ஒரு வண்ணம் துயரம்
நீங்கி - மணம் பொருந்திய மாலையணிந்த தயரதன் ஒருவாறு துயரம்
நீங்கியவனாய்; படை ஊற்றம இலன் சிறியன் இவன் -
படைக்கலப் பயிற்சியில் முதிர்ச்சி அடையாத சிறுவயதுடையவன்
இவ்விராமன்; பெரியோய் - தவத்திலும். மற்யை சிறப்புக்களிலும்
பெரியோரே!; பணி இதுவேல் - எனக்குத் தாங்கள் இடும்
கட்டளை இதுவேயானால்; பனிநீர்க் கங்கைபுடை ஊற்றும்
சடையானும் - குளிர்ந்த நீரையுடைய கங்கை பக்கங்களில் ஊற்றிக்
கொண்டிருக்கும் சடைமுடியையுடைய சிவபிரானும்; நான்முகனும்.
புரந்தரனும் - நான்கு முகங்களை உடைய பிரமனும் இந்திரனும்;
புகுந்து செய்யும் இடையூற்றுக்கு - அவ்வரக்கர்களுக்குத்
துணையாக வந்து புகுந்து செய்கின்ற தீங்குகளுக்கு; இடையூறா
நான் காப்பென் - தடையாக நின்று நான் காக்கிறேன்; பெரு
வேள்விக்கு எழுக என்றான் - (நீங்கள் செய்யத் தொடங்கிய
அந்தப்) பெரிய வேள்வியை நிறைவேற்ற இப்போதே எழுந்தருள்க
என்றான்.
அன்றலர்ந்த மலர் மாலை அணிந்திருக்கிறான் ஆதலின்.
அம்மாலை தேனைத் துளிக்கிறது என்பார். ‘’தொடையூற்றின் தேன்
துளிக்கும் நறுந்தாரான்’’ என்றார். ஊற்றுதல்: கொட்டுதல். தொடை:
தேன் கூடு. துளித்தல்: சொட்டுதல். தார்: மாலை. நறுந்தார்:
பண்புத்தொகை. பணித்தல்: கட்டளையிடுதல். பணி: கட்டளை.
முதல்நிலைத் தொழிற்பெயர். பனி: குளிர்ச்சி. புடை: பக்கம். சடை:
மயிர்த்தொகுதி. ‘இடையூற்றுக்கும்’ என்பதில் உம்மை தொகுக்கப்பட்டு
இடையூற்றுக்கு’’ என நின்றது. காப்பென்: தன்மை ஒருமை
வினைமுற்று. எழுக: வியங்கோள் வினைமுற்று. ஊற்றம்: முதிர்ச்சி
‘’படை ஊற்றும் இலன்’’ படைக்கலப் பயிற்சியால் முதிர்ச்சி அடையாத
சிறு வயதினன்’ என்பது குறிப்பு. ‘’கங்கை புடையூற்றும் சடையான்’’
கருத்துடையடை கொளணியாகும். 13
