கையடைப் படலம் - 327

bookmark

முனிவன் , வேள்வி காக்க இராமனைத் தருதி எனல்

327.

தருவனத்துள் யான் இயற்றும் தகை வேள்விக்கு
   இடையூறா. தவம் செய்வோர்கள்
வெருவரச் சென்று அடை காம வெகுளி என.
   நிருதர் இடை விலக்கா வண்ணம்.
‘’செருமுகத்துக் காத்தி’’ என. ‘நின் சிறுவர்
   நால்வரினும் கரிய செம்மல்
ஒருவனைத் தந்திடுதி’ என. உயிர் இரக்கும்
   கொடுங் கூற்றின். உளையச் சொன்னான்.
 
தருவனத்துள்  யான் இயற்றும் - மரங்கள் நிறைந்துள்ள காட்டில்
நான்  செய்கின்ற; தவவேள்விக்கு  இடையூறா  - பெரிய யாகத்துக்கு
இடையூறாக; தவம்  செய்வோர்கள்  வெருவர - தவம் செய்பவர்கள்
அஞ்சும்படியாக; சென்று  அடைகாம  வெகுளி  என  -  அவர்தம்
மனத்தைச்  சென்று  சேர்ந்த காமம்.  வெகுளி மயக்கங்களைப் போல;
நிருதர்   இடைவிலக்காவண்ணம்  -   அரக்கர்கள்  கெடுக்காதபடி;
செருமுகத்துக்  காத்தி  என  -  அவர்களோடு   செய்யும்   போர்
முகத்திலே   காத்தருள்  வாயாக என;  நின் சிறுவர் நால்வரினும் -
உன்புத்திரர்கள்  நால்வர்களுள்;  கரிய செம்மல் ஒருவனை - கருமை
நிறம் பொருந்திய செம்மலாகிய   ஒப்பற்றவனை;  தந்திடுதி  என  -
அளித்திடுவாயாக என்று;  உயிர்  இரக்கும்  கொடும்  கூற்றின்  -
உயிரைத் தாவெனக் கேட்கும் கொடிய கூற்றுவனைப் போல; உளையச்
சொன்னான் - மன்னன் மனம் வருந்தும்படி முனிவன் கூறினான்.

‘தருவனம்’  - மரங்கள் அடர்ந்த வனம். தவவேள்வி - நிஷ்காம்ய
வேள்வி என்பர். இடையூறு: தீமை. ‘ஊறு’ முதல்நிலை திரிந்த தொழிற்
பெயர்.  செருமுகம்  போர்முனை. காத்தி: ஏவலொருமை வினைமுற்று.
இரத்தல்:  யாசித்தல்.  கொடும்  கூற்று:  கொடிய  கூற்றுவன் (எமன்)
கொடிய சொல் எனவும் கொள்ளலாம். உளைதல்: மனம் வருந்துதல்.11