கையடைப் படலம் - 326
தசரதன் முனிவன்பால் யான்செய்வது அருளுக என்றல்
326.
உரைசெய்யும் அளவில். அவன் முகம் நோக்கி.
உள்ளத்துள் ஒருவராலும்
கரை செய்ய அரியது ஒரு பேர் உவகைக்
கடல் பெருக. கரங்கள் கூப்பி.
‘அரைசு எய்தி இருந்த பயன் எய்தினென்; மற்று.
இனிச் செய்வது அருளுக!’ என்று
முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய.
பின் மொழியும் முனிவன். ஆங்கே:
உரை செய்யும் அளவில் அவன் முகம் நோக்கி - இவ்வாறு
விசுவாமித்திரன் தன்னைப் புகழ்ந்து பேசியபோது. தயரதன்
அம்முனிவரது முகத்தைப் பார்த்து; உள்ளத்துள் ஒருவராலும் கரை
செய்ய அரியதொரு - தனது உள்ளத்திலே எவராலும் அளத்தற்கு
இயலாததாகிய ஒரு; பேர் உவகைக் கடல் பெருக - பெரிய மகிழ்ச்சி
என்னும் கடல் பெருகவும்; கரங்கள் கூப்பி - தனது இரு கைகளையும்
குவித்து (முனிவனை வணங்கி); அரசு எய்தி இருந்த பலன்
எய்தினன் - எனது ஆட்சியை அடைந்ததன் பயனை இன்று நான்
அடைந்தேன்; மற்று. இனிச் செய்வது அருளுக என்று -
இனி நான் என்ன செய்யவேண்டும் என்பதை அருள்வீராக
என்று; முரைசு எய்து கடைத்தலையான் முன் மொழிய -
முரசுகள் முழங்கும் வாயிலை உடைய தயரதன் முன்னர் எடுத்தியம்ப;
ஆங்கே பின்மொழியும் முனிவன் - அப்போதே விசுவாமித்திர
முனிவன்பின் கூறுவானாயினான்.
உரை செய்தல்: பேசுதல். ‘அளவு’ இங்குப் பொழுது குறித்தது.
உவகை: களிப்பு. கூப்பி: குவித்து. அரசு. முரசு என்பன எதுகை
நோக்கி அரைசு முரைசு என நின்றன. எய்தி: அடைந்து. எய்து: பகுதி.
மற்று: வினைமாற்றுப் பொருளில் வந்தது. அருளுக: வியங்கோள்
கடைத்தலை: தலைக்கடை என்பது மொழிமாறி நின்றது. முன்னே
மன்னன் மொழியப் பின்னே முனிவன் மொழிந்தான் என்பது கருத்து.
‘உவகைக் கடல்’ என்பதற்கேற்ப. கரை செய்ய அரியது என்றார்.
‘முன்மொழியப் பின் மொழியும்’ என்பது முரண்தொடை. 10
