கையடைப் படலம் - 325
325.
‘இன் தளிர்க் கற்பக நறுந் தேன் இடை துளிக்கும்
நிழல் இருக்கை இழந்து போந்து.
நின்று அளிக்கும் தனிக் குடையின் நிழல் ஒதுங்கி.
குறை இரந்து நிற்ப. நோக்கி.
குன்று அளிக்கும் குல மணித் தோள் சம்பரனைக்
குலத்தோடும் தொலைத்து. நீ கொண்டு
அன்று அளித்த அரசு அன்றோ. புரந்தரன் இன்று
ஆள்கின்றது?-அரச!’ என்றான்.
அரச புரந்தரன் இன்று ஆள்கின்றது-தயரத மன்னனே! இந்திரன்
இன்று ஆண்டு கொண்டிருக்கும் அமர ருலக ஆட்சி; இன்தளிர்க்
கற்பக நறும்தேன் இடை துளிக்கும் நிழல் இருக்கை -
இனிய தளிர்களை உடைய கற்பக மரத்தின் பூக்கள் தேனை
இடையிடையே துளிக்கின்ற நிழலை உடைய ஆசனத்தை; இழந்து
போந்து - இழந்து விட்டு உன்னிடம் வந்து; நின்று அளிக்கும்
தனிக்குடையின் நிழல் ஒதுங்கி - உலகனைத்தையும் நின்று
காக்கின்ற உனது ஒப்பற்ற வெண்குடை நிழலில் ஒதுங்கி நின்று;
குறை இரந்து நிற்ப நோக்கி - தனது குறைகளைச் சொல்லி
யாசித்து நிற்க. நீ அதைப் பார்த்தபின்; குன்று அளிக்கும் குலமணித்
தோள் சம்பரனை - மணிகளால் அலங்கரிக்கப்பட்ட குன்று
போன்ற தோள்கயைுடைய சம்பரன் என்ற அசுரனை குலத்தோடும்
தொலைத்து - அவனது கூட்டத்தாரோடும் அழித்து; நீ கொண்டு
அன்று அளித்த அரசு அன்றோ - நீ உனதாக ஆக்கிக் கொண்டு.
அன்று இந்திரனுக்குத் தந்த அரசை அல்லவா; புரந்தரன் இன்று
ஆன்கின்றது என்றான் - அவ்விந்திரன் இன்றளவும் தன்குரியதாக
ஆட்சி செய்து வருவது என்று முனிவன் கூறினான்.
கற்பகம்: தெய்வ தரு. துளித்தல்: சொட்டுதல். போந்து. வந்து.
தனிக்குடை: பொதுவறப்புரக்கும் குடை. ‘’குன்றளிக்கும்’’ என்பதிலுள்ள
அளிக்கும் இங்கு உவமைப் பொருள்தந்து நின்றது. கொண்டு: வரம்
கொண்டு. அரசன்றோ: ஓகாரம் தேற்றம். புரந்தரன்: ‘’இந்திரன்’’ தன்
நிழல். இருக்கை ஒழிந்து ‘’உன் நிழலிருக்கையில் ஒதுங்கினான்’’ எனப்
பெருமை தோன்றக் கூறுகிறார். நிற்ப - நோக்கி - தொலைத்து.
அளித்த அரசு புரந்தரன் இன்று ஆள்கின்றது என்று முடிக்க.
இந்திரனுடைய இருக்கை ‘சுதர்மை’ என்னும் பெயருடையது.
சம்பரனுக்குத் தோற்று ஆட்சியை இழந்தான் என்பதை ‘இருக்கை
இழந்து’ என்பதால் குறிப்பிட்டுக் காட்டினார். சம்பரனை -
குலத்தோடும் அழித்து இந்திரனுக்குத் தேவருலகாட்கியை மீட்டுத்
தந்த தயரதனது பெருமையை முனிவர் கூறினார் என்பது கருத்து. 9
