கையடைப் படலம் - 324

bookmark

விசுவாமித்திர முனிவன் தசரதனைப் புகழ்தல் (324-325)

324.

‘என் அனைய முனிவரரும் இமையவரும்
   இடையூறு ஒன்று உடையரானால்.
பல் நகமும் நகு வெள்ளிப் பனிவரையும்.
   பாற்கடலும். பதும பீடத்து
அந் நகரும். கற்பக நாட்டு அணி நகரும்.
   மணி மாட அயோத்தி என்னும்
பொன் நகரும். அல்லாது. புகல் உண்டோ?-
   இகல் கடந்த புலவு வேலோய்!
 
இகல் கடந்த புலவு வேலோய்- போரைக் கடந்து  வெற்றியடைந்த
புலால் நாற்றம் வீசும் வேலை உடையோய்; என் அனைய முனிவரரும்
இமையவரும்  -  என்னைப்  போன்ற   முனிவர்களும்  தேவர்களும்;
இடையூறு  ஒன்று  உடையர்  ஆனால் -  ஏதேனும்  தீங்கு  சிறிது
உடையவர்  ஆனால்;  பல் நகமும் நகு வெள்ளிப் பனி வரையும் -
பல   மலைகளையும்  தனது  ஒளியால்  எள்ளி  நகையாடும் வெள்ளி
மலையும்;  பாற்கடலும் பதுமபீடத்து அந்நகரும் -  திருப்பாற்கடலும்.
தாமரையாசனத்தையுடைய   பிரமன்   நகரமும்;   கற்பக    நாட்டு
அணிநகரும் - கற்பகம்  முதலிய  சிறப்புடைய  விண்நாட்டு  அழகிய
நகரமும்; மணிமாட அயோத்தி என்னும் பொன்நகரும்-மணிமயமான
மாடங்களை   உடைய  அயோத்தி  என்னும் இந்த நகரும்; அல்லாது
புகல் உண்டோ - அல்லால் அடைக்கலம் அடைவதற்கு வேறு இடம்
உண்டோ?

அயோத்தியைப்    பனிவரை    முதலியவற்றுடன்    ஒப்பிட்டுக்
கூறினமையின்   ஒப்புமைக்    கூட்டஅணி.  ‘என்  அனைய’  இதில்
‘அனைய’  உவமை  உருபு.  இடையூறு:தீங்கு. பல்நகம்: பல மலைகள்.
பனிமலை:  கைலாயம்   (இமயமலை)  கைலை  மலையும். பாற்கடலும்
முறையே  சிவபிரானுக்கும்  திருமாலுக்கும் உறைவிடங்களாகும். கற்பக
நாட்டணி      நகரம்.      இந்திரனுக்குரியது.     ‘’என்னையொத்த
முனிவர்களுக்கும் தேவர்களுக்கும் ஏதேனும் தீங்கு நேர்ந்தால் கைலை
முதல்  அயோத்தி  வரையுள்ள இந்த இடங்கள் அல்லாது வேறு புகல்
உண்டோ’’ என்றான் விசுவாமித்திரன் என்பது கருத்து.            8