கைகேயி சூழ்வினைப் படலம் - 1693
இராமன் விடைபெறுதல் ((1693-1694))
கைகேயியினிடம் இராமன் விடை கொள்ளுதல்
1693.
‘மன்னவன் பணி அன்றாகின்,
நும் பணி மறுப்பெனோ? என்
பின்னவன் பெற்ற செல்வம்
அடியனேன் பெற்றது அன்றோ?
என் இனி உறுதி அப்பால்?
இப் பணி தலைமேல் கொண்டேன்;
மின் ஒளிர் கானம் இன்றே
போகின்றேன்; விடையும் கொண்டேன்.’
‘மன்னவன் பணி அன்று ஆகின் - அரசன் கட்டளை அன்று
என்றாலும்; நும் பணிமறுப்பெனோ - நமது கட்டளையை யான்
செய்யமாட்டேன் என்பேனோ?; என் பின்னவன்பெற்ற செல்வம் - என்
தம்பி பரதன் அடைந்த பேறு; அடியனேன் பெற்றது அன்றோ -நான்
அடைந்தது அன்றோ?; அப்பால் என் இனி உறுதி - இதற்குப் புறம்பான
நன்மை வேறுயாது?; இப் பணி தலைமேல் கொண்டேன் -
இக்கட்டளையைத் தலையின்மேல்ஏற்றுக்கொண்டேன்; மின் ஒளிர்
கானம் - மின்னல் போல வெயிலொளி வீசும்காட்டிற்கு; இன்றே
போகின்றேன் - இப்பொழுதே போகின்றேன்; விடையும்கொண்டேன் -
நும்மிடம் விடையும் பெற்றுக்கொண்டேன்.
அரசன் கட்டளையிடவேண்டும் என்பதில்லை; நமது கட்டளையே
போதும். கானகம் செல்வேன்என்றான் இராமன். ‘மன்னவன் பணி அன்று
ஆகின்’ என்பதில்உம்மை தொக்கது. விடையும் கொண்டேன் - விரைவு
பற்றி இறந்த காலத்தால்கூறப்பட்டது; கால வழுவமைதி. 114
