கைகேயி சூழ்வினைப் படலம் - 1692

bookmark

1692.    

தெருளுடை மனத்து மன்ன
     ஏவலின் திறம்ப அஞ்சி,
இருளுடை உலகம் தாங்கும்
     இன்னலுக்கு இயைந்து நின்றான்,
உருளுடைச் சகடம் பூண்ட,
     உடையவன் உய்த்த கார் ஏறு
அருளுடை ஒருவன் நீக்க
     அப் பிணி அவிழ்ந்தது ஒத்தான்.

     தெருள் உடை மனத்து - தெளிவு பொருந்திய நெஞ்சினையுடைய;
மன்னன் ஏவலின்திறம்ப அஞ்சி- தயரத மன்னனின் கட்டளையிலிருந்து
மாறுபடுவதற்குப் பயந்து;  இருள்உடை உலகம் தாங்கும் - துன்ப இருள்
நிறைந்த உலகத்தைத் தாங்குகின்ற;  இன்னலுக்குஇயைந்து நின்றான் -
துன்பத்திற்கு ஒருப்பட்டு நின்றவனாகிய இராமன்;  உருள் உடைச்சகடம்
பூண்ட - சக்கரத்தையுடைய வண்டியில பூட்டப்பட்ட; உடையவன் உய்த்த
கார் ஏறு -உடையவனாலே செலுத்தப்பட்ட  கரிய காளையானது;  அருள்
உடை ஒருவன் நீக்க - கருணையையுடைய ஒருவன் வண்டியிற் பூட்டிய
பூட்டினை அவிழ்த்து விட;  அப் பிணி அவிழ்ந்ததுஒத்தான் - அப்
பிணிப்பிலிருந்து  விடுபட்டதைப் போல ஆனான்.

     அரசபாரத்தை வண்டியாகவும், அதனைச் சுமப்பவனை வண்டியிற்
பூட்டிய காளையாகவும்  கூறுதல்மரபாதலால், அரசச் சுமையை நீங்கிய
இராமன் வண்டிச் சுமையை நீங்கிய எருதுபோல வருத்தம்நீங்கி இருந்தனன்
என்றவாறு.  இஃது  உவமை அணி.  சகடம் - அரசாட்சி;  உடையவன் -
தயரதன்;கார் ஏறு - இராமன் இருள் - இடத்து  நிகழ் பொருளின் தன்மை
இடத்தின்மேல் ஏற்றிஉரைக்கப்பட்டது.  நின்றான் - வினையாலணையும்
பெயர்.                                                      113