கைகேயி சூழ்வினைப் படலம் - 1691
கவிக் கூற்று ((1691-1692))
இராமனது தோற்றப் பொலிவு
1691.
இப் பொழுது, எம்ம னோரால்
இயம்புதற்கு எளிதே? - யாரும்
செப்ப அருங் குணத்து இராமன்
திருமுகச் செவ்வி நோக்கின்;
ஒப்பதே முன்பு பின்பு;
அவ் வாசகம் உணரக் கேட்ட
அப் பொழுது அலர்ந்த செந்தா
மரையினை வென்றது அம்மா!
யாரும் செப்ப அருங் குணத்து இராமன் - எவராலும்
சொல்லுதற்கரியநற்பண்புகளையுடைய இராமபிரானது; திருமுகச் செவ்லி
நோக்கின் - திருமுகத்தின் அழகைப்பார்த்தால்; எம்மனோரால்
இயம்புதற்கு எளிதே - (அது) எம்மைப் போன்றவர்களால்சொல்லுவதற்கு
எளிதோ? (அன்று); முன்பு பின்பு ஒப்பதே - கைகேயி சொன்னவற்றைக்
கேட்பதற்கு முன்பும் அவற்றைக் கேட்டதற்குப் பின்பும் செந்தாமரையைப்
போன்றிருந்தது; அவ்வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது - அந்தச்
சொற்களைத் தெரியும்படி கேட்ட அந்தச்சொற்களைத் தெரியும்படி கேட்ட
அந்தச் சமயத்தில்; அலர்ந்த செந்தாமரையினை -மலர்ந்த செந்தாமரை
மலரினை; வென்றது - வென்றுவிட்டது.
கைகேயியின் கொடி சொற்கள் இராமனைத் துன்புறுத்தாமல்
இன்புறுத்தியதால் அப்பொழுது அவன்முகம் தாமரையின் அழகை வென்றது
என்பதாம். எளிதே - ஏகாரம் எதிர்மறை. அம்மா - வியப்புஇடைச்சொல்.
இதனோடு, “மெய்த் திருப்பதம் மேவு” என்ற போதினம் “இத் திருக்
துறத்துஏகு” என்ற போதினும், சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை,
ஒத்திருக்கும் முகத்தினைஉன்னுவாள்” (5088) என்னும் சுந்தர காண்டப்
பாடல் ஒப்பு நோக்கத்தக்கது. 112
