கைகேயி சூழ்வினைப் படலம் - 1683

bookmark

அரண்மனையில் அரசனைக் காணாமை

1683.    

ஆங்க வந்து அடைந்த அண்ணல்,
     ஆசையின் கவரி வீச,
பூங் குழல் மகளிர் உள்ளம்
     புதுக் களி ஆட, நோக்கி,
வீங்கு இருங் காதல் காட்டி,
     விரி அரி சுமந்த பீடத்து
ஓங்கிய மகுடம் சூடி,
     உவகை வீற்றிருப்பக் காணான்.

     ஆங்கு வந்து அடைந்த அண்ணல் - தயரதனின் அரண்மனைக்கு
வந்து சேர்ந்தஇராமபிரான்;  ஆசையின் கவரி வீச - திசைகள் தோறும்
சாமரைகள் வீச;  பூங் குழல்மகளிர் உள்ளம் - பூவை அணிந்துள்ள
குழலையுடைய மங்கையர் மனம்;  புதுக் களி ஆட - புதிய மகிழ்ச்சியால்
ஆடவும்;  வீங்கு  இருங் காதல் காட்டி -  மிகுந்த விருப்பத்தை
(தன்வருகையில்) காட்டி;  ஓங்கிய மகுடம் சூடி - சிறந்த கிரீடத்தை
அணிந்த;  அரசன் - தயரதன்; விரி அரி சுமந்த பீடத்து - விசாலமான
சிங்கம் தாங்கும்ஆசனத்தில்;  உவகை வீற்றிருப்பக் காணான் -
மகிழ்வுடன் வீற்றிருக்கவும்கண்டானில்லை.

     மகளிர் உவகையால் ஆடுதலையும் தயரதன் காதல் காட்டி
வீற்றிருத்தலையும் இராமன்காணவில்லை அரண்மனை பொலிவின்றி
இருந்தது.  என்றவாறு.  ஆசை - திசை.  வீற்றிருத்தல் -மற்றொருவர்க்கு
இல்லாத சிறப்போடு விளங்கித் தோன்றுதல்.                       104