கைகேயி சூழ்வினைப் படலம் - 1682
1682.
ஆண்டு, இனையராய் இனைய கூற, அடல் வீரன்,
தூண்டு புரவிப் பொரு இல் சுந்தர மணித் தேர்,
நீண்ட கொடி மாட நிரை வீதி நிறையப் போய்,
பூண்ட புகழ் மன்னன் உறை கோயில் புகலோடும் -
ஆண்டு - (நகரமக்கள் வீதியாகிய) அவ்விடத்து; இனையராய் -
இத்தன்மையராகி; இனைய கூற - இத்தன்மையனவற்றைச்
சொல்லிக்கொண்டிருக்க; அடல்வீரன் - வெற்றி வீரனாகிய இராமபிரான்;
தூண்டு புரவி - (சுமந்திரனால்)செலுத்தப்பட்ட குதிரைகள் பூட்டப்பட்ட;
பொரு இல் சுந்தர மணித் தேர் - ஒப்பற்றஅழகிய மணிகள் கட்டிய
தேரில்; நீண்ட கொடி மாட நிரை வீதி - உயர்ந்தகொடிகளையுடைய
மாளிகை வரிசையினையுடைய தெரு; நிறையப் போய் - நிறைவாக
விளங்கும்படிசென்று; புகழ்பூண்ட மன்னன் உறை கோயில் - புகழை
ஆபரணமாக அணிந்துள்ள தயரதன்தங்குகின்ற அரண்மனையை;
புகலோடும் - அடைந்த அளவில்.
இனையர், இனைய - குறிப்பு வினையாலனையும் பெயர். புகலோடும்
-உம்மீற்று வினையெச்சம். 103
