கைகேயி சூழ்வினைப் படலம் - 1676
பலர் செயல்
கலிவிருத்தம்
1676.
‘சந்தம் இவை; தா இல்மணி
ஆரம் இவை; யாவும்
சிந்துரமும் இங்கு இவை;
செறிந்த மத வேழப்
பந்திகள், வயப் பரி,
பசும் பொனின் வெறுக்கை,
மைந்த! வறியோர் கொள
வழக்கு’ என நிரைப்பார்.
மைந்த - வீரனே!; இவை சத்தம் - இவை சந்தனக் கலவைகள்;
இவை தாஇல் மணி ஆரம் - இவை குற்றமில்லாத இரத்தின மாலைகள்;
இங்கு இவை -இவ்விடத்திலுள்ள இவை; சிந்துரமும் - திலகமும்; யாவும்-
மற்றை எல்லாஅணிகளும் ஆகும்; செறிந்த மதவேழப் பந்திகள் -
பொருந்திய மதயானை வரிசைகள்; வயப் பரி - வெற்றியையுடைய
குதிரைகள்; பசும் பொனின் வெறுக்கை - பசும்பொன்னாலாகிய
செல்வங்கள்; வறியோர் கொள - (இவற்றையெல்லாம்) பொருளில்லாத
ஏழைகள் பெற்றுக்கொள்ளும்படி; வழக்கு - (உன்கையால்) எடுத்துக் கொடு;
எனநிரைப்பார் - என்று வரிசையாகக் கொண்டுவந்து வைப்பவர் சிலர்.
இராமனுக்கு முடிசூட்டுவிழா நிகழும் காலத்தில் அவனுக்கு நன்மை
விளைய வேண்டும் என்று கருதிய சிலர் தம்முடைய பொருளான சந்தனம்
முதலியவற்றை அவன் கையில்கொடுத்து வறியவர்களுக்கு வழங்க வேண்டும்
என்று வேண்டினர். வழங்குதல் - வரம்பு இல்லாமல் கொடுத்தல். 97
