கைகேயி சூழ்வினைப் படலம் - 1655
மன்னர் முடிசூடும் மண்டபத்துப் புகுதல்
1655.
சந்திரர் கோடி என்னத் தரள
வெண் கவிகை ஓங்க,
அந்தரத்து அன்னம் எல்லாம்
ஆர்ந்தெனக் கவரி துன்ன,
இந்திரற்கு உவமை சாலும்
இருநிலக் கிழவர் எல்லாம்
வந்தனர்; மௌலி சூட்டும்
மண்டபம் மரபின் புக்கார்.
இந்திரற்குஉவமை சாலும் - தேவேந்திரனுக்கு உவமையாகத்தக்க;
இரு நிலக்கிழவர் எல்லாம் - பெரிய நாடுகளுக்குத்தலைவர்களான
அரசர்கள் எல்லாரும்; சந்திரர்கோடி என்ன -சந்திரர் எண்ணற்றோர்
என்னும்படி; தரள வெண் கவிகை ஓங்க - முத்துகளால்ஆகிய
வெள்ளியகுடைகள் மேலோங்கவும்; அந்தரத்து அன்னம் எல்லாம்
ஆர்ந்தெனத- வானில் அன்னப்பறவைகள் எல்லாம் நிறைந்தன
என்னும்படி; கவனி துன்ன - வெண்சாமரங்கள்நெருங்கவும்;வந்தனர் -
வந்து; மௌலி சூட்டும் மண்டபம் -இராமபிரான் முடிபுனைதற்குரிய
மண்டபத்துள்; மரபின் புக்கார் - முறைப்படிபுகுந்தனர்.
மன்னர்கள் தம் வரிசையோடு மண்டபத்தில் முறைப்படி புகுந்தனர்
என்பது கருத்து. இன்பத்துய்ப்பில் இந்திரனுக்கு மேலானவர் என்பார்.
‘இந்திரற்கு உவகை சாலும்’ என்றார்.வெண்சாமரைகள் அசைவு, நிறம்
ஆகியவற்றால் அன்னம் போல்வன. வந்தனர் - முற்றெச்சம். 76
